புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலத்திற்குள் உற்பத்தி செய்யப்படும் ஆஸ்பெஸ்டாஸ் சிமென்ட் ஷீட்ஸ்களுக்கு அம்மாநில அரசு கடந்த 2017ம் ஆண்டு ‘வாட் வரி’ விலக்கு அளித்ததற்கு எதிராக பிற மாநிலங்களின் உற்பத்தியாளர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து முன்னதாக இந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது,‘‘மாநிலத்திற்குள் தயாரிக்கப்படும் பொருளுக்கு ஒரு வரியும், மாநிலத்திற்கு வெளியே தயாரிக்கப்படும் பொருளுக்கு ஒரு வரி எனவும் வரி பாகுபாட்டை ராஜஸ்தான் அரசு கையாள்வதாக மனுதாரர்கள் குற்றம் சாட்டியிருந்தார்கள். இதையடுத்து வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா தலைமையிலான அமர்வில் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில்,‘‘மாநில அரசுகள் தங்களது எல்லைக்குள் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு ஒரு வரியும், அதேப்போன்று மாநில எல்லைக்கு வெளியே உற்பத்தி செய்யப்படும் பொருளுக்கு ஒரு வரியும் என்று வரி பாகுபாடு காட்ட முடியாது. இதில் கடந்த 2017ம் ஆண்டு ராஜஸ்தான் அரசு கொண்டுவந்த இந்த முடிவு பாராபட்சமானது ஆகும். இது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என்பதால் அதனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்கிறது. இதேபோல், இறக்குமதி செய்யப்பட்ட பொருளுக்கும், உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்ட பொருளுக்கும் இடையே பாகுபாடு காட்ட முடியாது என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.