Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வெளியுறவு கொள்கையின் பேரழிவு; இதற்கும் காங்கிரசை குற்றம்சாட்ட முடியாது: டிரம்ப் வரி விதிப்புக்கு கார்கே விமர்சனம்!

டெல்லி: இந்தியா மீதான கூடுதல் வரி விதிக்கப்பட்டிருப்பது வெளியுறவு கொள்கையின் பேரழிவு என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது; இந்தியாவின் தேச நலன் தான் மிக முக்கியமானது. இந்தியாவின் நீண்டகால கொள்கையான, சார்ப்பற்ற சுயாட்சியைப் புரிந்துகொள்ளாமல் அநியாயமாக இந்தியாவைத் தண்டிக்கும் எந்த நாடும் இந்தியாவின் எஃகு கட்டமைப்பைப் புரிந்துகொள்வதில்லை.

7ஆவது கடற்படை அச்சுறுத்தல் முதல் அணுசக்தி சோதனைக்கான தடைகள் வரை, அமெரிக்காவுடனான எங்கள் உறவை சுயமரியாதை மற்றும் கண்ணியத்துடன் காங்கிரஸ் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டது.

இருநாட்டு உறவுக்கு பேரழிவு தரும் வகையில், டிரம்ப்பின் 50 சதவிகிதம் வரி நடவடிக்கை உள்ளது.

மோடி அவர்களே,

1. நான் தான் தாக்குதலை நிறுத்தினேன் என்று ட்ரம்ப் கூறியபோது, நீங்கள் அமைதியாக இருந்தீர்கள். இதுவரை அவர் குறைந்தது 30 முறையாவது இதைச் சொல்லியிருப்பார். இன்னும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

2. 2024-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி, ட்ரம்ப் பிரிக்ஸ் நாடுகளின் மீது 100 சதவிகிதம் வரி விதிப்பேன் என்று அச்சுறுத்தினார். மேலும், 'பிரிக்ஸ் செத்துவிட்டது' என ட்ரம்ப் கூறியப்போது, அங்கு அமர்ந்துகொண்டு பிரதமர் மோடி சிரித்துக்கொண்டிருந்தார்.

3. பல மாதங்களாக ட்ரம்ப் 'பரஸ்பர வரி' விதிப்பது குறித்து திட்டமிட்டுக் கொண்டிருந்தார். இது நம் அனைவருக்குமே தெரியும். ஆனால், முக்கிய துறைகளான விவசாயம், சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் மற்றும் வேறு தொழிற்சாலைகளைப் பாதிக்கும் இந்த வரியைக் கொஞ்சம் மாற்றுவதற்கான எதையையுமே நீங்கள் மத்திய பட்ஜெட்டில் செய்யவில்லை.

4. உங்களது அமைச்சர்கள் மாதக் கணக்கில் அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதில் பலர் பல நாள்களுக்கு வாஷிங்டன்னிலேயே முகாமிட்டிருந்தனர்.

5. ஆனால், நீங்கள் அமெரிக்கா உடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் தோற்றுவிட்டீர்கள். உங்களுக்கு ஆறு மாதக் காலத்திற்கு மேலாக நேரம் இருந்தது. இப்போது, ட்ரம்ப் நம்மை மிரட்டி, கட்டாயப்படுத்துகிறார். ஆனாலும், நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள்.

2024-ம் ஆண்டு இந்தியா அமெரிக்காவிற்கு ரூ.7.51 லட்சம் கோடி அளவில் ஏற்றுமதிகளைச் செய்துள்ளது. 50 சதவிகித வரி என்பது ரூ.3.75 லட்சம் கோடி பொருளாதாரச் சுமை.

சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள், விவசாயம், பால் பொருள் இன்ஜினீயரிங் பொருள்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள், கற்கள் மற்றும் நகைகள், மருத்துகள், பெட்ரோலியப் பொருள்கள், ஆடை செய்ய பயன்படும் பருத்தி ஆகிய நமது துறைகள் மிகவும் பாதிப்படையும்.

இதை எப்படி சமாளிப்பது என்பது குறித்து உங்கள் அரசிடம் எந்தப் பதிலும் இல்லை.

வெளியுறவுத் துறைக் கொள்கை பேரழிவிற்கும் 70 ஆண்டுக்கால காங்கிரஸை நீங்கள் குற்றம் சாட்டிவிட முடியாது எனத் தெரிவித்துள்ளார்.