கொல்கத்தா: அர்ஜென்டினாவை சேர்ந்த கால்பந்தாட்ட ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி வரும் டிசம்பர் 12ம் தேதி இந்தியா வருவது உறுதியாகி உள்ளது. அர்ஜென்டினா கால்பந்தாட்ட ஜாம்பவான் வீரரும், இன்டர் மியாமி அணி கேப்டனுமான லியோனல் மெஸ்ஸி, இந்தியா வரவுள்ளதாக செய்திகள் உலா வந்தன. இந்நிலையில் மெஸ்ஸி இந்தியா வருவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சதாத்ரு தத்தா நேற்று தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: லியோனல் மெஸ்ஸி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதற்கு இறுதி ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
அப்பயணத்திற்கு ‘கோட் டூர் ஆப் இந்தியா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. பயணத் திட்டப்படி, வரும் டிசம்பர் 12ம் தேதி, மெஸ்ஸி, இன்டர் மியாமி அணி வீரர்களுடன் கொல்கத்தா நகருக்கு வருகை தருவார். அங்கு 2 பகல், ஒரு இரவு என, அவரது பயணத்திட்டம் இருக்கும். அதைத் தொடர்ந்து, அகமதாபாத், மும்பை, டெல்லி நகரங்களில் மெஸ்ஸி பயணம் மேற்கொள்வார். வரும் 15ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் அவரது இல்லத்தில் சந்திப்பதுடன் மெஸ்ஸியின் இந்திய பயணம் நிறைவு பெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.