சென்னை: 2000 உணவு டெலிவரி ஊழியர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க தலா ரூ.20,000 மானியம் வழங்க தமிழக அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு இணையம் சார்ந்த தற்சார்புத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், 2,000 இணையம் சார்ந்த சேவைப்பணி தொழிலாளர்களுக்கு புதிதாக இ-ஸ்கூட்டர் வாகனம் வாங்கும் பொருட்டு தலா ரூ.20,000 மானியமாக வழங்கும் புதிய திட்டம் கடந்த மார்ச்சில் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிதியமைச்சர் அறிவித்தார்.
இதை நிறைவேற்றும் வகையில் முதற்கட்டமாக 2000 உணவு டெலிவரி ஊழியர்களுக்கு தலா ரூ.20,000 மானியமாக வழங்க ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மானியம் பெற, தமிழ்நாடு இணையம் சார்ந்த தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறைகள் மற்றும் தேவையான ஆவணங்கள் குறித்த கூடுதல் தகவல்களை நல வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnuwwb.tn.gov.in காணலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாதவர்கள், இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் மூலம் டெலிவரி ஊழியர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.