Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

லட்சங்களைக் கொட்டிக் கொடுக்கும் உணவுக்காடு!

நெல், வேர்க்கடலை, பலபயிர் சாகுபடி என தனக்குச் சொந்தமான ஐந்து ஏக்கரில் பலவகையான விவசாயங்களை செய்துவருகிறார் திருவள்ளூர், பெரிய நாகப் பூண்டி கிராமத்தைச் சேர்ந்த மோகன்தாஸ். இருந்தபோதும், விவசாயத்தில் பெரிதாகச் சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 60 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதிலும் பெரிய அளவில் லாபம் பார்த்து வருகிறார். 60 ஏக்கரில் சுமார் ஒரு லட்சத்தி முப்பத்தி ஆராயிரம் மரங்களை நட்டு, மிகப்பெரிய உணவுக்காட்டையே உருவாக்கியிருக்கிறார். மேலும், மீன்குட்டை, கோழிவளர்ப்பு, கால்நடை வளர்ப்பு என அனைத்து வகையான விவசாயத்திலும் சாதித்துவரும் மோகன்தாஸின் விவசாயப் பயணத்தைப் பற்றி தெரிந்துகொள்ள, அவர் உருவாக்கிய உணவுக்காட்டுக்குச் சென்றோம்.

எங்கள் வருகையை ஏற்கனவே தெரிந்து வைத்திருந்த மோகன்தாஸ், எங்களை புன்னகையோடு வரவேற்றார். 60 ஏக்கரையும் சுற்றிக் காண்பித்தபடி அவரைப் பற்றியும், அவரது விவசாயத்தைப் பற்றியும் பேசத் தொடங்கினார்.நான் பாரம்பரிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். அதனாலே, சிறுவயதிலே எனக்கு விவசாயம் அறிமுகமானது. டிப்ளமோ அக்ரிகல்சர் படித்துவிட்டு வெளிநாட்டில் வேலை பார்க்கச் சென்று விட்டேன். அங்கு வேலை பார்க்கும்போது, அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகவே, ஊருக்குத் திரும்பினேன். இங்கு வந்தவுடன், என்ன வேலை செய்வதென்று தெரியவில்லை. அப்பா விவசாயம் செய்துவந்த ஐந்து ஏக்கரில் நாமும் விவசாயம் செய்யலாமென நினைத்து, அந்த ஐந்து ஏக்கரில் பலவகையான மரங்களை நட்டு உணவுக்காடை உருவாக்கி, அதிலிருந்து வருமானம் பார்த்து வந்தேன். இதையே பெரிய அளவில் செய்யலாமென யோசித்து, எனது கிராமத்திற்கு

அருகேயுள்ள வெங்கல்ராஜ் குப்பத்தில், 60 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து இதே உணவுக்காடு கான்செப்ட்டை அங்கு உருவாக்கினேன் என்றவர் மேலும் தொடர்ந்தார்.

இந்த நிலத்தை குத்தகைக்கு வாங்கும்போது 11 ஆயிரம் தென்னையும், 8000 மாமரங்களுக்கும்தான் இருந்தது. நான் வந்தபிறகு, சுமார் 1 லட்சத்தி 36 ஆயிரம் மரங்களை நட்டு பெரிய உணவுக்காடாக இந்நிலத்தை உருவாகியிருக்கிறேன். ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலிய தேக்கு மரங்கள், 1000 செம்மரங்கள், 800 நாட்டுத்தேக்கு, 58 வேப்பமரங்கள், 36 புங்கைமரங்கள், 18 இழுப்பை மரங்கள், 20 சந்தன மரங்கள் என இன்னும் பல மரங்களை நட்டிருக்கிறேன். அதுபோக, 8 இடங்களில் மூங்கில் காட்டை உருவாக்கியிருக்கிறேன். கூடவே, பாக்கு மரம், பலவிதமான பலா மரம், ஐந்து வகையான வாழைமரம், கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டுமே பயிரிடப்படும் முந்திரி இந்த நிலத்திலும் பயிரிட்டு காட்ட வேண்டும் என்ற நோக்கில் முந்திரி மரங்களையும் பயிரிட்டுள்ளேன்.குறிப்பாக, இந்த நிலத்தில் ஐந்தடுக்கு முறையில் விவசாயம் செய்து வருகிறேன். அதாவது, ஆண்டுக்கு ஒரு முறை வருமானம் தரும் மரங்கள், அதையொட்டி, மாதந்தோறும் வருமானம் தரும் மரங்கள், பின் வாரந்தோறும் வருமானம் தரும் மரங்கள், தினந்தோறும் வருமானம் வரும் பழமரங்கள் போன்றவற்றை நட்டிருக்கிறேன். இதற்கிடையில்,மஞ்சளும் மிளகும் சாகுபடி செய்து வருகிறேன்.

இந்த பண்ணையில் அனைத்து வகையான விவசாயமும் இயற்கை முறையில்தான் சாகுபடி செய்யப்படுகிறது. எந்த விதமான உரங்களும் பயன்படுத்துவது கிடையாது. அதேபோல, இங்கு உற்பத்தியாகும் அனைத்துப் பொருளுமே, மதிப்புக்கூட்டிதான் விற்பனை செய்யப்படுகிறது. உதாரணத்திற்கு, 11 ஆயிரம் தென்னைகளில் இருந்து கிடைக்கும் தேங்காய்களை, தேங்காய் எண்ணெயாக மதிப்புக்கூட்டி விற்பனை செய்கிறேன். மாடுகளில் இருந்து கிடைக்கும் பாலில் இருந்து நெய் தயாரிக்கிறோம். மாட்டிலிருந்து கிடைக்கும் சாணத்தில் பஞ்சகவ்ய விளக்கு தயாரித்து அதையும் விற்பனை செய்கிறேன்.மேலும், தற்பொழுது லெமன் கிராஸ் எனப்படும் மூலிகை தாவரங்கள் பயிரிட்டுள்ளேன். பப்பாளி, எலுமிச்சை, முருங்கை போன்ற காய்கறி வகைகளும் பயிரிட்டுள்ளேன். இயற்கையான மீன் பண்ணை குட்டை அமைத்து அதிலிருந்து கிடைக்கும் மீன் கழிவுகளை தண்ணீரில் கலந்து பயிர்களுக்கு கொடுக்கிறேன். அது, உரமாகவும் இருக்கிறது.

இதுபோக, இந்தப் பண்ணையில் 80 மாடுகள் இருக்கின்றன. அதிலிருந்து காலை 115 லிட்டர் பாலும், மாலை 110 லிட்டர் பாலும் கிடைக்கின்றது. சராசரியாக ஒரு நாளைக்கு 200 லிட்டருக்கு குறைவில்லாமல் பால் கிடைக்கிறது. அதை, நெய்யாக மதிப்புக்கூட்டி விற்பனை செய்கிறேன். மீதமிருக்கும் பாலை, பெங்களூருக்கு ஏற்றுமதி செய்கிறேன். அதேபோல, இங்கு விளையும் அனைத்து மாங்காக்களும் நேரடியாக சூப்பர் மார்க்கெட்டிற்குத்தான் செல்கிறது. கடந்த வருடம் மட்டும் 58 டன் மாங்காய்களை 46லட்சத்திற்கு விற்பனை செய்தேன். வருடத்திற்கு ஒருமுறை 36 லட்சம் குத்தகைதாரருக்கு கொடுக்க வேண்டும். அதுபோக, எனது பண்ணையில் 7 வேலை ஆட்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு சம்பளமும், குத்தகை பணமும் மா விற்பனையில் இருந்தே எடுத்து விடுவேன். மீதமுள்ள, அனைத்து விற்பனையுமே எனது லாபம்தான் எனக் கூறுகிறார் மோகன்தாஸ்.

தொடர்புக்கு:

மோகன்தாஸ் : 99444 47960.

ஒரு லட்சத்திற்கும் அதிகமான மரங்களை நட்டு, பெரும் உணவுக்காட்டையே உருவாக்கியிருக்கும் மோகன்தாஸ், அவரது பண்ணையில் தேனீப் பெட்டிகளின் மூலம் தேன் உற்பத்தியும் செய்து வருகிறார். சுமார் 230 தேனீப் பெட்டிகளில் இருந்து 15 நாட்களுக்கு ஒருமுறை 130 கிலோ தேன் அறுவடை செய்கிறார். இந்த தேனை, திருவள்ளூர் மாவட்ட இயற்கை உழவர் சந்தையில் விற்பனை செய்கிறார். இந்தப் பண்ணையைச் சுற்றி 42கி.மீ பரப்பளவில், காடு இருப்பதால் தேனீக்களுக்கான உணவை இந்தக்காட்டில் இருந்தே எடுத்துக்கொள்கின்றன. இதனால் இயற்கையான தேன் எனது பண்ணையில் உற்பத்தியாகிறது என்கிறார்.

மலைப் பிரதேசங்களில் விளையக் கூடிய மிளகை தனது பண்ணையில் சாகுபடி செய்து வருகிறார் மோகன்தாஸ். திருவள்ளூர் மாவட்டத்தில் எங்குமே சாகுபடி செய்யாத மிளகை, தனது பண்ணையில் விளைவித்து வரும் வருடத்தில் அறுவடை செய்ய இருக்கிறார் மோகன்தாஸ்.