Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உணவும் அதன் பாரம்பரியமும்!

அயல்நாட்டு உணவுகளின் வருகையால், பண்டைய தமிழரின் பாரம்பரிய உணவுகளை எல்லாம் மறந்துவிட்டு, நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்று நாம் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் வெள்ளை அரிசி கூட நம் பாரம்பரிய உணவில்லை என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். பசுமைப் புரட்சிக்குப் பிறகு இந்தியாவில் அரிசி உற்பத்தி அதிகமானது. இந்தியாவில் உணவுப் பஞ்சத்தைப் போக்க, அயல் நாட்டினர் நவீன முறைகளைப் பயன்படுத்தி வெள்ளை அரிசியை அதிகம் தயாரித்தனர். நெல்லின் மேல் தோலான உமி மற்றும் உள் தோலான தவிடு நீக்கப்பட்டு வெண்மை நிறத்திற்காக பாலீஷ் செய்யப்பட்டு வெறும் சக்கையாக கிடைக்கும் வெள்ளை அரிசியைத்தான் நாம் சாப்பிட்டு வருகிறோம். ஆனால் நம் தமிழ் முன்னோர்கள் நெல்லின் தோல் நீக்கப் படாத சிவப்பரிசியைத்தான் உண்டு வந்தார்கள். இந்த சிவப்பு அரிசி தீட்டப் படாத அரிசி என்றும், முழு அரிசி என்றும் சொல்லலாம். வெள்ளை அரிசியில் உள்ள சத்துக்களை விட நான்கு மடங்கு சத்துக்கள் சிவப்பரிசியில் கிடைக்கின்றன. நம் முன்னோர்கள் இந்தச் சிவப்பரிசி மட்டுமில்லாமல் கம்பு, தினை, சாமை, கேழ்வரகு, பனிவரகு, கருவரகு போன்ற பல சிறுதானியங்களையும் சாப்பிட்டு உள்ளனர்.

சங்க கால இலக்கியங்கள் நம் தமிழ் நிலங்களை ஐந்து வகையாகப் பிரிக்கின்றன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஒவ்வொரு இடத்திலும் வாழ்ந்த மக்களின் உணவுப்

பழக்கவழக்கங்கள் மாறுபட்டவை. காலை உணவாகக் கம்பங்கூழ், பல்வேறு காய்கறியில் செய்யப்பட்ட துவையல் போன்றவற்றைச் சாப்பிட்டுவிட்டு வேலைக்குச்சென்றார்கள். மதியம் அசைவ உணவு சாப்பிடுகிறவர்களாக இருந்தனர். புரதச்சத்து (புரோட்டீன்) அதிகம் நிறைந்துள்ள புலால் மற்றும் மீன் வகைகளை உண்டார்கள். மதிய வேளையில் சைவ உணவு சாப்பிடுபவர்கள் கம்பு சாதம், எள்ளு சாதம் போன்றவற்றையும் பாசிப்பயறு, தட்டைப்பயறு போன்ற பல பயிர் வகைகளைச் சேர்த்தும் சாப்பிட்டு இருக்கிறார்கள். முக்கனிகள் என்றழைக்கப்படும் மா, பலா, வாழை ஆகியவற்றைத் தினமும் உண்ணும் உணவில் சேர்த்துக் கொண்டனர். இரவு உணவுக்குச் சிறுதானியங்கள் கொண்டு செய்யப்பட்ட உணவுகளான கம்பு தோசை, கேழ்வரகு தோசை, சோளமாவில் செய்த இட்லி, கேழ்வரகு பணியாரம் போன்றவற்றைச் சாப்பிட்டார்கள். ஆனால் நாம் இன்று பயன்படுத்தும் வெள்ளைச் சர்க்கரையை அவர்கள் பயன்படுத்தவில்லை.

கரும்புச்சாறில் இருந்து கிடைக்கும் வெல்லம் மற்றும் பனைமரத்தில் இருந்து பதநீர் எடுத்து, அதிலிருந்து தயாரிக்கப்படும் கருப்பட்டி போன்ற இனிப்பை பலகாரங்களில் பயன்படுத்தினார்கள். தினமும் சாப்பிடும் அவர்களது உணவுகளில் மஞ்சள், மிளகு, துளசி போன்ற பல மருத்துவக்குணம் உள்ள மூலிகை களைச் சேர்த்து சமைத்து உண்டார்கள். இதனால் அவர்களுக்கு உணவே மருந்தாய் அமைந்தது. ஆனால், நாமோ இன்று சாப்பிடும் உணவுகளின் விளைவால் ஏற்படும் புற்றுநோய், சர்க்கரை நோய், நீரிழிவுநோய் போன்ற நோய்களுக்கு மருந்துகளைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம். உதாரணத்திற்கு, குரோசரி என்கிற மளிகை ஸ்டோர் போன்றவற்றுக்கு நாம் சென்றால், நம் கண்களுக்கு முதலில் தென்படுவது முதன்மையில் நிற்கும் சில நிறுவனங்கள் தயாரித்த உணவுப் பொருட்கள்தான். ஆனால் தமிழர்களின் பாரம்பரிய உணவாகிய சிறுதானியங்கள் போன்ற உணவுப் பொருட்கள் ஏதாவது ஒரு மூலையில் தேடிக் கண்டுபிடிக்கும்படி வைக்கப்பட்டிருக்கும். சில கடைகளில் அதுவும் இருக்காது.தமிழர்களின் பாரம்பரிய உணவுகளைத் தமிழ் மக்களாகிய நாம் மறந்து விட்டோமா அல்லது அயல்நாட்டு நிறுவனங்களால் மறைக்கப்பட்டுள்ளதா? ஆம் மறைக்கப்பட்டிருக்கிறது, அல்லது மறக்கடிக்கப்பட்டுள்ளது.

நாம் அனைவரும் இதைச் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்தக் காலகட்டத்தில் அறிவியல் வளர்ச்சி மேலோங்கி நாகரிகம் வளர வளர, நம் உணவு வகைகளும் மாறி மாறி வளர்ந்து கொண்டே வருகின்றன. உணவு ஒவ்வொரு நாட்டு மக்களின் அடையாளமாக விளங்குகிறது. உணவென்பது உயிர் வாழ மட்டுமின்றி, மனிதனையும் அனைத்து உயிர்களையும் வித்தியாசப் படுத்தும் ஒரு கருவியாகவும் இருக்கிறது. மிருகங்களைக் கூட நாம் அதன் உணவு முறையை வைத்து அதன் தன்மை மற்றும் அதன் செயல்களை வைத்து வரையறை செய்கிறோம். இதன்மூலம் நமக்கு உணவென்பது உயிர் வாழத் தேவைப்படும் பொருளாக மட்டுமின்றி, பலவற்றை வெளிக்கொணரும் ஓர் இயந்திரமாகவும் இருக்கிறது. நம் தமிழகத்தை எடுத்துக்கொண்டால், அரிசிச்சோறு முதன்மையாய் விளங்கும். அதைப்போல் வட மாநிலங்களை நாம் பார்த்தோமானால் சப்பாத்தியை முதன்மை உணவாக உட்கொள்வார்கள். இடத்திற்கு இடம், நாட்டுக்கு நாடு உணவு என்பது வேறுபட்டுத்தான் நிற்கிறது. இவ்வாறு நாம் உணவை அடிப்படையாக வைத்து மனிதனின் கலாச்சாரம், தன்மை, பிறப்பிடம், விளைபொருள், சமூகம், பொருளாதாரம் போன்றவற்றைக் கொண்டு அடையாளமாய் தெரிந்துகொள்ள முடிகிறது. இதில் மனிதனின் நிலைப்பாடும் அவன் வாழும்போது அவன் எடுத்துக் கொள்ளும் உணவும்

பிரதிபலிக்கும். உயிர் என்றால் உணவு. உணவென்பது நம் அடையாளமும் என்பதை நாம் அனைவரும் உணர்ந்து வாழ வேண்டும். நம் பாரம்பரிய உணவுப் பொருட்கள் மருத்துவக் குணம் நிறைந்தவை. அதைப் பின்பற்றி நம் உடல் நலனைப் பேணிக் காப்போம்!

- நஜீமா ஜமான்.

எக்கனாமி மீல்ஸ்!

ரயிலில் பயணம் செய்யும்போது பசி நம்மைப் பாடாய் படுத்தும். சிலர் அவசர அவசரமாக ரயில் ஏறிவிடுவார்கள். அப்போது சாப்பாட்டுக்கு ததிங்கினத்தோம் போட வேண்டியிருக்கும். அதுவும் ஜெனரல் கோச் பயணிகளின் நிலை இன்னும் மோசம். இந்தப் பிரச்னைக்கு ஒரு புதிய தீர்வு கிடைத்திருக்கிறது. இதுபோன்ற பயணிகளுக்காக எக்கனாமி மீல்ஸ் என்ற புதிய திட்டம் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) கொண்டு வந்துள்ள இந்தத் திட்டத்தில் மிகவும் மலிவு விலையில், அதாவது வெறும் ரூ.20க்கு உணவு வழங்கப்படுகிறது. இது குறிப்பாக பொது பெட்டிகளில் (ஜெனரல் கம்பார்ட்மென்ட்) பயணம் செய்யும் பயணிகளைக் கருத்தில் கொண்டு இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய திட்டம், குறிப்பாக பட்ஜெட் பயணிகளுக்கு நல்ல பலன்கொடுக்கும். இந்தியாவில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில் நிலையங்களில்,

பயணிகளுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் உணவு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுவான இரண்டாம் வகுப்பு (ஜெனரல் செகண்ட் கிளாஸ்) பெட்டிகளுக்கு அருகே இந்த மலிவு உணவு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளதால், பொது பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு எளிதில் கிடைக்கும்.