அண்ணாநகர்: நாளை மறுநாள் ஆயுத பூஜை பண்டிகை முன்னிட்டு, இன்று காலை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பூக்கள் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. இதனால் அனைத்து பூக்களின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ மல்லி, ஐஸ் மல்லி ஆகியவை 600 ரூபாயில் இருந்து 800க்கும் முல்லை மற்றும் ஜாதிமல்லி 500 ரூபாயில் இருந்து 700க்கும் கனகாம்பரம் 400ல் இருந்து 800க்கும் அரளி பூ 200ல் இருந்து 350க்கும் சாமந்தி 100 ல் இருந்து 180க்கும் சம்மங்கி 100 இருந்து 200க்கும் பன்னீர்ரோஸ் 80 ல் இருந்து 100க்கும் சாக்லேட் ரோஸ் 160 ரூபாயில் இருந்து 200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘’ஆயுத பூஜை பண்டிகை முன்னிட்டு இன்று காலை கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ள நிலையிலும் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் பூக்களின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது’’ என்றார்.