யமுனையில் கரைபுரண்டோடும் வெள்ளம்; தாஜ்மகாலுக்கு ஆபத்தா? வரமா?... உலக அதிசயத்தை சுற்றி பெரும் பரபரப்பு
ஆக்ரா: பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் யமுனை நதியின் வெள்ளம் தாஜ்மகாலின் அடித்தளத்திற்கு நன்மையா? அல்லது அதன் கட்டமைப்பிற்கு அச்சுறுத்தலா? என்ற விவாதம் எழுந்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க யமுனை நதிக்கரையில் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை ஷாஷகான் கட்டியதற்கு முக்கியக் காரணமே, அதன் அடித்தளத்தில் உள்ள மகோகனி மற்றும் கருங்காலி போன்ற சிறப்பு வாய்ந்த மரங்கள் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும் என்பதுதான். யமுனை நதியின் நீரே இந்த மரங்களுக்குத் தேவையான ஈரப்பதத்தை அளித்து, அடித்தளத்தின் வலிமையைப் பாதுகாக்கிறது. இந்த ஈரப்பதம் குறைந்தால் மரங்கள் காய்ந்து, ஒட்டுமொத்த கட்டமைப்பும் பலவீனமடையும் அபாயம் உள்ளது. ஆனால், அதே சமயம், யமுனையின் மாசடைந்த நீர், அதன் பளிங்குக் கற்களைக் கறுப்பாக்குகிறது.
யமுனையில் ஆற்று நீர் வறண்டு போனால், நதியிலிருந்து பறக்கும் தூசியும் அதன் அழகிற்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, யமுனை நதி தாஜ்மகாலுக்கு வரமாகவும், சில நேரங்களில் சாபமாகவும் இருந்து வருகிறது. தற்போது, தொடர் கனமழை காரணமாக யமுனை நதியில் நீர்வரத்து அதிகரித்து, தாஜ்மகாலைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. தாஜ்மகாலின் பின்னால் அமைந்துள்ள பூங்காவிற்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால், உலகப் பாரம்பரியச் சின்னத்தின் பாதுகாப்பு குறித்து பெரும் கவலை எழுந்துள்ளது. இதையடுத்து, உள்ளூர் மாநட்ட நிர்வாகமும், இந்தியத் தொல்லியல் துறையும் உஷார் நிலையில் உள்ளதுடன், நதிக்கரையோரப் பகுதிகளைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன.
அடித்தளத்திற்கு நீர் அவசியம் என்றாலும், இந்த அளவுக்கு அதிகரித்துள்ள வெள்ள நீர் உலக அதிசயத்தின் மற்ற கட்டமைப்புகளுக்கு சேதம் விளைவிக்குமோ? என்ற அச்சம் எழுந்துள்ளதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.