கோபி: பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக கொடிவேரி அணை மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்கி வரும் கொடிவேரி அணையானது பவானி ஆற்றின் குறுக்கே சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அணையாகும். சுமார் 15 அடி உயரத்தில் இருந்து அருவிபோல் தண்ணீர் விழுவதால் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக குளிக்க முடியும்.
அணையின் மேல் பகுதியில் பவானி ஆற்றின் கரையோரமாக சுமார் 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை பாதுகாப்பான பரிசல் பயணம், கடற்கரை போன்ற நீண்ட மணல்பரப்பு, குழந்தைகள் விளையாட சிறுவர் பூங்கா என அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ள இந்த அணைக்கு செல்ல 5 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
குறைந்த செலவில் ஒரு முழு விடுமுறையை கழிக்க முடியும் என்பதாலும், அணையில் விற்பனை செய்யப்படும் சுவையான மீன் வகைகளை சாப்பிட்டு அருவிபோல் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்வதற்காகவே தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்தும், ஒவ்வொரு அரசு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் இங்கு வருவது வழக்கம்.
தற்போது பவானி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கொடிவேரி அணை பகுதியில் பவானி ஆற்றில் இருந்து இன்று காலை முதல் வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது. இதனால் கொடிவேரி அணையிலிருந்து 1,691 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பு கம்பியைத் தாண்டி தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் கொடிவேரி அணையை மூடி, சுற்றுலா பயணிகள் அணை பகுதிக்கு வரவும் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டது. அதேபோன்று பவானி ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகளுடன் வருவாய்த்துறையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.