Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
South Rising
search-icon-img
Advertisement

பரவனாற்றில் வெள்ளப்பெருக்கு 2 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம்

*5 கிராம விவசாயிகள் கவலை

புவனகிரி : பரவனாற்றில் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டு 2 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் 5 கிராம விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் பருவமழை தொடங்கி 2 நாட்களாக இரவு முழுவதும் கனமழை பெய்து வருகிறது.

இதனால் தாழ்வான பகுதி மற்றும் நீர்நிலைகள் நிரம்பி குடியிருப்புகள், விளைநிலங்களை மழைநீர் சூழ்ந்தது. இதன் காரணமாக குடியிருப்பு வாசிகள், விவசாயிகள் பாதிப்படைந்தனர்.

புவனகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையினால் ஏராளமான ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியது. குறிப்பாக புவனகிரி அருகே பூவாலை கிராமத்தில் சுமார் 750 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.

இதுபோல் அருகில் உள்ள அலமேலுமங்காபுரம், மணிக்கொல்லை, பால்வார்த்துண்ணான், வயலாமூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமானது. இடுப்பளவு தண்ணீரில் பயிர்கள் மூழ்கி உள்ளதால் விவசாயிகள் செய்வதறியாது வேதனை அடைந்துள்ளனர்.

பரவனாற்றில் இருந்து வெளியேறிய மழைநீர் நெல் வயல்களில் புகுந்து பயிர்கள் சேதமாகிறது. ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் பரவனாற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கினால் இந்த கிராமங்களில் உள்ள விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.பரவனாற்றின் ஒரு பகுதி சில ஆண்டுகளுக்கு முன் தூர்வாரப்பட்டது.

மற்றொரு பகுதியான பெரியப்பட்டு கிராமம் வரை தூர்வார வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. தற்போது இந்த 5 கிராமங்களிலும் வயல்களை சூழ்ந்த தண்ணீர் வடிவதற்கு சில நாட்கள் ஆகும். தண்ணீர் முழுவதுமாக வடிவதற்குள் நெற்பயிர்கள் அழுகி நாசமாகிவிடும். இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், தொடர்ந்து பெய்த மழையினால், பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மூழ்கி சேதமாகியுள்ளது. ஏற்கனவே விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று என்எல்சி நிறுவனம் சுமார் ரூ.50 கோடி மதிப்பில் பரவனாற்றை தூர்வாரியது. எஞ்சியுள்ள 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு பரவனாற்றை தூர்வாரி தர வேண்டும்.

கடந்த 2 தினங்களாக பெய்த மழையால் பல ஏக்கர் பயிர்கள் நாசமாகி விட்டது. ஒரு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வரை செலவு செய்திருக்கிறோம். எனவே வருவாய் துறையும், வேளாண்மை துறையும் உரிய கணக்கீடு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும், என்றனர்.