Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வெள்ள நீர் எளிதில் கடலில் கலக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் கட்டமைப்பு மேம்பாடு - சீரமைப்பு பணிகள் ஆய்வு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

சென்னை: தென்சென்னை பகுதியில் வெள்ள நீர் எளிதில் கடலில் சென்று சேரும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டமைப்பு மற்றும் சீரமைப்பு பணிகளை துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் ஆய்வு செய்தார். எதிர்பாராத பெரும் மழையினால் வெள்ளம் ஏற்பட்டாலும், சென்னையில் நீர்தேங்காமல் இருப்பதற்காக நீர்வளத்துறை, சென்னை மாநகராட்சி ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள கால்வாய்களில் ஆழப்படுத்துதல், அகலப்படுத்துதல், கான்கிரீட் சுவருடன் கூடிய மூடு கால்வாய் அமைத்தல், மழைநீர் கால்வாய்கள் அமைத்தல், கால்வாய்கள் கடலுடன் சேரும் பகுதிகள், முகத்துவாரப் பகுதிகளில் தொடர்ந்து தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக கடந்த ஆண்டுகளில் ஒரு சில மணி நேரங்களிலேயே அதிக அளவில் மழை பெய்தபோதும், சில மணி நேரங்களிலேயே வெள்ள நீர் வடிந்து உடனடியாக போக்குவரத்து நடைபெறும் நிலை உருவானது. இதன் தொடர்ச்சியாக, தற்காலத்தில் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் ஏற்படும் மேகவெடிப்பு உள்ளிட்ட பெருமழையினால் திடீர் வெள்ளம் ஏற்பட்டாலும் அதனை எதிர்கொள்ளும் வகையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ள முன்னேற்பாட்டு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த பணிகளை ஆய்வு செய்து மீதமுள்ள பணிகளை துரிதப்படுத்தும் வகையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தென்சென்னை பகுதியில் நீர்வழிப் பாதைகளை மேம்படுத்தி பருவமழை காலத்தில் வெள்ள நீர் எளிதில் கடலில் சென்று சேரும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டமைப்பு மேம்பாடு மற்றும் சீரமைப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதலாவதாக ஒக்கியம் மடுவு கால்வாயில் 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளில் ஒரு பகுதியாக காரப்பாக்கத்தில் சென்னை மெட்ரோ ரயில் மேம்பாலப் பணி நடைபெற்று வரும் பகுதியில் மடுவின் கரைகளை அகலப்படுத்தி சீரமைக்கும் பணியினால் நீர் தடையின்றி செல்வதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து ஒக்கியம் மடுவு கால்வாயில் 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளில் ஒரு பகுதியாக பள்ளிக்கரணை சதுப்புநிலப்பகுதிகளில் இருந்து வெளியேறும் நீர் எளிதாக கடலுக்கு செல்லும் வகையில், கண்ணகி நகர் பகுதியில் தூர்வாரும் பணிகளையும், நீர் தடையின்றி செல்வதையும் மடுவின் வலதுபுற கரையில் தனியார் கல்லூரி பகுதியில் இருந்து, பார்வையிட்டார். மேலும், ஒக்கிய மடுவு காரப்பாக்கம் பாலத்தின் கீழ்ப்புறம் தூர்வாரும் பணிகளையும், மற்றுமொரு தனியார் கல்லூரிக்கு செல்லும் வழியில் வலது புற கரையை அகலப்படுத்தும் பணிகளையும் பார்வையிட்டார்.

அப்பகுதியில் மணல் திட்டுக்களை அகற்றும் பணிகளையும், கண்ணகி நகர் பகுதியில் இடது புற கரையையும், தடுப்புச்சுவர் கட்டும் பணிகளையும் பார்வையிட்டு, சீரமைப்பு மற்றும் கட்டமைப்பு பணிகளை விரைந்து முடிக்குமாறு நீர்வளத்துறை அலுவலர்களுக்கு துணை முதல்வர் அறிவுறுத்தினார்.

மேலும் சோழிங்கநல்லூர் பகுதியில் சதுப்பு நிலத்தில் நீர் எளிதாக செல்லவதற்காக, மேடவாக்கம் மற்றும் சோழிங்கநல்லூரை இணைக்கின்ற வகையில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள உயர் மட்ட பாலத்தை பார்வையிட்டதுடன், மழைக்காலத்தில் வெள்ள நீர் தடையின்றி எளிதில் செல்லும் வகையில் பழைய பாலத்தை விரைவாக இடித்து அப்புறப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளவும், சீரமைக்கவும் நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வில் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை கூடுதல் தலைமை செயலாளர் பிரதீப் யாதவ், சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், நீர்வளத்துறை செயலாளர் ஜெயகாந்தன், அரசு உயர் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.