Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உங்கள் பாதத்தை சுத்தமாக்க வீட்டிற்கே வந்துள்ளது கங்கை: வெள்ளத்தில் தவித்த பெண்ணிடம் உபி அமைச்சர் நக்கல்

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் தொடர் கனமழை காரணமாக கங்கை, யமுனை ஆறுகளில் நீர் மட்டம் உயர்ந்து கான்பூர், பிரயாக்ராஜ், வாரணாசியில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், கான்பூரின் தேஹாத் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மாநில மீன்வளத்துறை அமைச்சர் சஞ்சய் நிஷாத் சென்றுள்ளார். அங்கு, வீட்டை வெள்ளம் சூழ்ந்த ஒரு பெண்ணிடம் அவர், ‘‘உங்கள் பாதங்களை சுத்தம் செய்ய கங்கை உங்கள் வீட்டு வாசற்படிக்கே வந்துள்ளது. இது உங்களை நேரடியாக சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும்’’ என்றார்.

பதிலுக்கு அந்த பெண், ‘‘கங்கையின் ஆசி எங்களுக்கு வேண்டாம், நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்’’ என கூறிய வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி சர்ச்சையை கிளப்பின. இது குறித்து, பாஜ கூட்டணி கட்சியான நிஷாத் கட்சியை சேர்ந்த சஞ்சய் நிஷாத், ‘‘கங்கையில் நீராடி புண்ணியம் தேட நாட்டின் தொலைதூர பகுதிகளில் இருந்து மக்கள் வருகிறார்கள். அப்படிப்பட்ட கங்கை நதி நீர் வீட்டு வாசலில் இருப்பதைத்தான் கூறினேன். நதிகளை தெய்வமாக வணங்கும் நிஷாத் சமூகத்தை சேர்ந்தவன் நான்’’ என்றார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சமாஜ்வாடி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷர்வேந்திர பிக்ரம் சிங், ‘‘இது அமைச்சரின் உணர்வின்மையைக் காட்டுகிறது. வெள்ளத்தால் மக்கள் தங்கள் வீடுகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்து தவிக்கும் நேரத்தில், இதுபோன்ற பேச்சுகள் உபி அமைச்சர்கள் கள யதார்த்தத்திலிருந்து எவ்வளவு துண்டிக்கப்பட்டுள்ளனர் என்பதை காட்டுகின்றன. மாநில அரசு மக்களுக்கு நிவாரணம் வழங்கத் தவறிவிட்டது. சுதேசி பற்றி போதிக்கும் அமைச்சர்கள், ஆடம்பரமான, இறக்குமதி செய்யப்பட்ட கார்களில் சுற்றித்திரிகிறார்கள்’’ என்றார். முன்னதாக, வீட்டு வாசலில் சூழ்ந்த வெள்ள நீரில் பிரயாக்ராஜ் காவல் அதிகாரி ஒருவர் பால் ஊற்றி அபிஷேகம் செய்த வீடியோ வைரலானது. அவரும் நிஷாத் சமூகத்தை சேர்ந்தவர்தான் என அமைச்சர் சஞ்சய் நிஷாத் கூறி உள்ளார்.