வெள்ளம் பாதித்த இடங்களை பார்வையிட சென்ற பாஜ எம்பி மீது தாக்குதல் கல்வீச்சில் பலத்த காயம்: மேற்கு வங்கத்தில் பரபரப்பு
ஜல்பைகுரி: மேற்கு வங்கத்தின் வட பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் மிரிக் மற்றும் சுகியா பொகாரி ஆகிய இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. மிரிக் பகுதியில் பாலம் இடிந்து விழுந்தது. நிலச்சரிவுகள், பாலம் இடிந்த விபத்துகளில் சிக்கி 28 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மாயமாகியுள்ளனர்.டார்ஜிலிங்கில் நிலச்சரிவால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் சிக்கி தவிக்கின்றனர். அவர்களை மீட்டு வர பஸ்கள் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,ஜல்பைகுரி மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பாஜ எம்பி காகென் முர்மு, நேற்று பார்வையிட சென்றார். வௌ்ளம், நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட நக்ரகாட்டா என்ற இடத்தில் மீட்பு நிவாரண பணிகளை நேற்று அவர் பார்வையிட சென்றார். அப்போது எம்பியின் காரை சிலர் மறித்து தாக்குதல் நடத்தினர். காரை நோக்கி கல் வீசியதில் கார் கண்ணாடி உடைந்து அவரது தலையை கல் தாக்கியது. இதனால் தலையில் இருந்து ரத்தம் வழிந்தோடியது. இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் அவரை மீட்டு சிலிகுரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
காகன் முர்முவுடன் சென்றிருந்த எம்எல்ஏவான சங்கர் கோஷ் மீதும் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. அவர் காயம் எதுவுமின்றி தப்பினார்.மேற்கு வங்கத்தில் பாஜ எம்பி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாஜ கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜ தகவல் தொடர்பு பிரிவு பொறுப்பாளர் அமித் மாளவியா எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில், மழை,வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக பழங்குடியினத்தை சேர்ந்த எம்பி காகென் முர்மு நக்ரகட்டாவுக்கு சென்ற போது திரிணாமுல் தொண்டர்களால் தாக்கப்பட்டுள்ளார். திரிணாமுல் கட்சி, மாநில நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. இது தான் திரிணாமுல் காங்கிரசின் வங்காளம் என குறிப்பிட்டுள்ளார்.
⦁ மனித தவறால் வெள்ளம்: மம்தா குற்றச்சாட்டு
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று பேட்டியளிக்கையில், வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்தார். மேலும் கூறுகையில்,‘‘ ஜார்க்கண்டை காப்பாற்றுவதற்காக தாமோதர் பள்ளத்தாக்கு கழகம்(டிவிசி) தன்னுடைய இஷ்டம் போல் வெள்ளத்தை திறந்து விட்டுள்ளது. வெள்ளம் மனிதர்களால் ஏற்பட்டது. 12 மணி நேரத்தில் 300 மிமீ மழை பெய்துள்ளது. இது நிலைமையை மோசமாக்கியது. டிவிசி நிறுவனம் செய்த தவறினால் மேற்கு வங்கம் மோசமான நிலையை சந்திக்கிறது. வெள்ள நிலையை சமாளிக்க ஒன்றிய அரசு நிதி தரவில்லை. மாநில அரசு தான் செலவழிக்கிறது’’ என்றார். தாமோதர் பள்ளத்தாக்கு கழகம்(டிவிசி) மேற்கு வங்கம் மற்றும் ஜார்க்கண்டின் தாமோதர் நதியில் ஏற்படும் வெள்ளத்தை கட்டுப்படுத்தவும், மின்சாரத்தை உற்பத்தி செய்யவும் அமைக்கப்பட்ட ஒன்றிய அரசு நிறுவனம் ஆகும்.