வெள்ளப் பாதிப்பை பார்வையிட சென்ற காங். எம்பியை முதுகில் சுமந்து சென்ற மக்கள்: பீகாரில் அரசியல் சர்ச்சை
கத்திஹார்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த காங்கிரஸ் எம்.பி., மக்களின் முதுகில் ஏறிச் சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் கங்கை, கோசி உள்ளிட்ட நதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், கத்திஹார் தொகுதியின் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் தாரிக் அன்வர், தனது தொகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இரண்டு நாட்கள் நேரில் ஆய்வு செய்தார்.
இதற்காக அவர் டிராக்டர், படகு போன்றவற்றில் பயணம் செய்து மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். இந்த நிலையில், அவர் வெள்ளம் பாதித்த பகுதி ஒன்றில், கிராமத்தினர் முதுகில் ஏறிச் செல்லும் காணொளி ஒன்று வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சேறும் சகதியுமான வயல்வெளியில், கிராம மக்கள் அவரை முதுகில் சுமந்து செல்லும் இந்தக் காட்சி, அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது. கத்திஹார் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுனில் யாதவ் கூறுகையில், ‘ஆய்வின் போது எங்களது வாகனம் சேற்றில் சிக்கிக் கொண்டது. சுமார் 2 கி.மீ. தூரம் நடக்க வேண்டியிருந்தது. கடுமையான வெயில் காரணமாக தாரிக் அன்வருக்கு உடல்நிலை சரியில்லாமல் தலைசுற்றல் ஏற்பட்டது. இதையறிந்த கிராம மக்கள், அன்பின் மிகுதியால் தாங்களாகவே முன்வந்து அவரை முதுகில் தூக்கிச் சென்றனர்’ என்றார். மேலும், அவர் கீழே விழுந்துவிடாமல் இருக்க மற்றவர்கள் பிடித்துக் கொள்வதும், போலீஸ்காரர் ஒருவர் அவருக்கு உதவுவதும் அந்த காணொளியில் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து ஆளும் பாஜக கூட்டணி கட்சி தலைவர்கள், தாரிக் அன்வரின் செயலை கடுமையாக விமர்சித்துள்ளனர்.