மிதவை கப்பலில் 3 பேர் பலி விபத்து தடுப்பு நடவடிக்கையை உறுதி செய்ய வேண்டும்: மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் மிதவை கப்பலின் டேங்க் சுத்தம் செய்யச் சென்ற ஜார்ஜ் ஷரோன், சந்தீப்குமார் மற்றும் ஜெனிஸ்டன் ஆகிய மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். 2018ம் ஆண்டில் இதேபோன்ற விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். தற்போது மூன்று இளம் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். டேங்க் சுத்தம் செய்யும் பணிக்கு செய்ய வேண்டிய முன் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யப்பட்டதா, டேங்க்கின் மூடி மிகக் குறுகலாக இருந்ததால் வெல்டிங் இயந்திரம் கொண்டு வந்து வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இந்த பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு சாதனங்கள் வழங்கப்பட்டதா என்ற வினாக்கள் எழுகின்றன. இதுகுறித்து விரிவான விசாரணை செய்து, தடுப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும். உயிரிழந்த 3 தொழிலாளர் குடும்பங்களுக்கும் தலா குறைந்தபட்சம் ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.