பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்றில் இன்று அதிகாலை திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், அங்கு கரையோரத்தில் வசிக்கும் கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. மேலும், இந்த வெள்ளப் பெருக்கினால் 3 தரைப்பாலங்கள் மூழ்கியதில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் நீர்தேக்க அணையில் கட்டாற்று வெள்ளம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அந்த அணை முழு கொள்ளளவை எட்டியதால், நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை அதிகளவு உபரிநீர் திறந்து விடப்பட்டது. இதனால் பள்ளிப்பட்டு அருகே உள்ள கொசஸ்தலை ஆற்றில் இன்று அதிகாலை முதல் அதிகளவு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளிப்பட்டு அருகே கீழ்கால்பட்டடை, சாமந்தவாடா, நெடியம் பகுதிகளில் உள்ள 3 தரைப்பாலங்கள் வெள்ள நீரில் மூழ்கிவிட்டன. இதனால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டு முற்றிலும் முடங்கியது.
மேலும் பள்ளிப்பட்டு, சொரக்காய்பேட்டை பகுதிகளில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணைகளிலும் வெள்ளம் கரைபுரண்டு சீறிப் பாய்ந்து செல்கிறது. இதனால், கொசஸ்தலை ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் கிராம மக்களுக்கு வருவாய்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. மேலும், கொசஸ்தலை ஆற்றின் தரைப்பால பகுதிகளில் போலீசாரும் வருவாய் துறையினரும் எச்சரிக்கை பலகை வைத்து, பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு கிராம மக்களிடையே பரபரப்பு நிலவியது.