வரும் 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது திருவண்ணாமலை கார்த்திகை தீபவிழாவுக்கு 4,764 சிறப்பு பஸ்கள்: ஆய்வு கூட்டத்தில் அமைச்சர்கள் தகவல்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா வரும் 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவின் நிறைவாக, டிசம்பர் 3ம் ேததி மகாதீப பெருவிழா நடைபெற உள்ளது. இந்நிலையில், தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து, அனைத்துத்துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் தர்ப்பகராஜ், அறநிலையத்துறை செயலாளர் மணிவாசகம், ஆணையாளர் ஸ்ரீதர், எம்பி சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், வேலூர் சரக டிஐஜி தர்மராஜ், எஸ்பி சுதாகர் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: இந்த ஆண்டு தீபத்திருவிழாவில், 40 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். அதையொட்டி, கடந்த ஒரு மாதமாக முன்னேற்பாடுகள் திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் நடந்து வருகிறது.
தீபத்திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், சுகாதாரம், போக்குவரத்து வசதி ஆகியவை சிறப்பாக செய்து தரப்படும். இந்த ஆண்டு 4,764 சிறப்பு பஸ்கள் 11,293 நடைகள் இயக்கப்படும். 24 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்படும். மேலும், சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 20 ஆயிரம் கார்கள் நிறுத்தும் வகையில் 130 இடங்களில் கார் பார்க்கிங் வசதி செய்யப்படும்.
மேலும், 90 மருத்துவ குழுக்கள், 45 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருக்கும். கடந்த ஆண்டு மலைச்சரிவு ஏற்பட்டதால், மலையேற பக்தர்களை அனுமதிக்கவில்லை. இந்த ஆண்டும் மழை பெய்து வருகிறது. எனவே, மலையேற அனுமதிப்பது குறித்து ஆலோசித்து அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
அதைத்தொடர்ந்து, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறுகையில், ‘கடந்த ஆண்டு மலைச்சரிவு ஏற்பட்டதால், தீபம் ஏற்றப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனாலும், தீபத்தை பாரம்பரியப்படி ஏற்ற வேண்டும் என முதல்வர் தெரிவித்தார். அதன்படி, எவ்வித பாதிப்பும் இல்லாமல் அனைவரும் பாராட்டும்படி விழாவை நடத்தினோம். அந்த அனுபவத்தின் அடிப்படையில், இந்த தீபத்திருவிழா பக்தர்களின் மனம் குளிரும் வகையில் சிறப்பாக நடத்தப்படும்’ என்றார்.
* எத்தனை பேருக்கு அனுமதி?
அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், ‘தீபத்திருவிழாவின் போது கோயிலுக்குள் உள்ள இடவசதியின் அடிப்படையில் எவ்வளவு பேரை அனுமதிப்பது என ஆலோசித்து முடிவு செய்யப்படும். தேரோடும் மாட வீதி ரூ.15 கோடியில் கான்கிரீட் சாலையாக மாற்றப்பட்டுள்ளது. எனவே, 5 தேர்களின் வீதியுலாவும் அதிகபட்சம் 10 மணி நேரத்துக்குள் முடித்துவிட முடியும். நள்ளிரவு வரை தேரோட்டத்தை நீட்டிப்பது பாதுகாப்பானது இல்லை’ என்றார்.


