‘‘காட்டன் சூதாட்டம், மணல் திருட்டு ஜோரா நடந்தாலும் காக்கிகள் கண்டுக்கிறதில்லை என ஜனங்க கேள்வி மேல கேள்வி எழுப்புறாங்களாமே..’’ என கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘மிஸ்டர் பத்தூர் மாவட்டத்துல காட்டன் சூது, மணல் திருட்டு ஜோரா நடக்குது.. குறிப்பா சொல்லணும்னா, மிஸ்டர் பத்தூர் கிராமிய காக்கிகள் நிலையத்துல அதிக அளவுல காட்டன் சூது நடக்குதாம்.. இதுக்காக கிளப்புகளும் இயங்கி வருதாம்.. ஒன்னு இல்ல ரெண்டு இல்ல ஏகப்பட்ட கிளப்புகள் இயங்கி வர்றதாக புகார்கள் வந்திருக்குது.. இந்த கிளப்புகள் மூலமாக, பணத்தை இழந்து தவிக்குறது தினக்கூலிகள், ஏழை மக்கள் தான் அதிகளவில் இருக்குறாங்களாம்.. இதுக்கு பாதுகாப்பு கவசமாக இருக்குறதே, அந்த லிமிட்டோட தனி காக்கி தானாம்.. ஸ்டார் காக்கிகளுக்கும் தெரியுமாம்.. அவங்களும் கண்டுக்குறதில்லையாம்.. உள்ளூர் பிரச்னைகளை மாவட்ட தலைமைக்கு சொல்லி, அதை தடுக்க வேண்டிய காக்கியே இப்படி செய்தா எப்படின்னு சமூகத்தோட ஆர்வலருங்க பலபேரு கேள்வி கேட்க தொடங்கியிருக்காங்களாம்.. இதனால, மாவட்ட தலைமை காக்கி இதனை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கணும்னு ஜனங்களோட கோரிக்கை குரல் ஒலிக்க தொடங்கியிருக்கிறது..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘வரும் சட்டமன்ற தேர்தலில் வாரிசுக்கு சீட் வாங்க திரைமறைவில் களமிறங்கியிருக்கும் மாஜி அமைச்சர் யாரு..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தேனிக்காரர் அணியில் உள்ள நெற்களஞ்சியத்தை சேர்ந்த மாஜி அமைச்சர் ‘வைத்தியானவர்’ மீண்டும் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்துள்ளாராம்.. சமீபகாலமாக, தனது வாரிசையும் களத்தில் இறக்கி விட்டுள்ளாராம்... அந்த வாரிசு தான், அரசியல் ரீதியான பல்வேறு வேலைகளை தற்போது செய்து வருகிறாராம்.. யார் அழைத்தாலும், அழைக்காவிட்டாலும் வாரிசு நேரிடையாக சென்று பேசி விடுவாராம்.. 2026 சட்டமன்ற தேர்தலில், வாரிசை களத்தில் இறக்க வைத்தியானவர் முடிவு செய்துள்ளாராம்.. இதற்கான சீட் வாங்கும் வேலை தற்போது திரைமறைவில் நடக்கிறதாம்.. அதுவும், நெற்களஞ்சிய தொகுதியை ‘குறி’ வைத்து தான் காய்நகர்த்தி வருகிறாராம்.. அந்த தொகுதியில் தேர்தல் வேலையை வைத்தியானவர் தொடங்கி இருக்கிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மனை, நகைகளாக வாங்கி குவிக்கும் பெண் அதிகாரி விசாரணையில் இருந்து தப்பிக்க உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்குன்னு பட்டாசு கொளுத்தி போடுகிறாராமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘புரம் என்று முடியும் மாவட்டத்தில், தலைநகர் தாலுகாவில் கனியையும், மொழியையும் வைத்துள்ள பெண் அதிகாரி மீது அடுக்கடுக்கான புகார் எழுந்திருக்கிறதாம்.. வருவாய் துறையில் கொடிகட்டி பறக்கும் அவர் ப வைட்டமினுக்கு பதிலாக மனை, நகைகளாக வாங்கி குவித்து வருகிறாராம்.. இதுபற்றி விஜிலென்சுக்கு ரகசிய புகார்கள் சென்றிருக்கிறதாம்.. மனைகள் உட்பிரிவு செய்வதற்கு ப வைட்டமின் வாங்கினால் சிக்கிக் கொள்வோம் என்பதாலேயே உறவினர்கள் பெயரில் மனைகளை பத்திரப்பதிவு செய்துள்ளாராம்..
மேலும் நகை கடைகளுக்கு ரீனிவல், அனுமதி கொடுக்க ப வைட்டமினுக்கு நிகராக நகைகளாக பெற்று வருவதாக எழுந்த புகாரில் தற்போது விசாரணை நடந்துக்கிட்டு வருகிறதாம்.. குறிப்பாக தமிழக எல்லையில் மனை உட்பிரிவு செய்ததில் பல லகரத்தில் மதிப்பிலான வீட்டுமனையை மகள் பெயரில் பதிவு செய்த ஆதாரத்துடன் புகார் செல்ல, பெண் அதிகாரி மீதான விசாரணை தீவிரமாகி உள்ளதாம்.. ஆனால் அவரோ பிடியிலிருந்து தப்பிக்க, மாவட்ட உயர் அதிகாரிகளுக்கும் பங்கிருப்பதாக மத்தாப்பு பட்டாசு வெடிப்பதால் விசாரணையும், நடவடிக்கையும் நிலுவையில் இருக்கிறதாம்.. மீண்டும் எப்போது இவ்விவகாரம் சூடுபிடிக்குமோ என்ற முணுமுணுப்பு தாலுகாவில் உலாவுகிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘வெளிப்படையாக வெளியே வந்தால் பதவி பறிபோகும் என பயந்து பதுங்கியிருந்தாலும் பாய வேண்டிய நேரத்தில் பாய தயாராகவே இருக்காங்களாமே ஐந்து மாஜிக்கள்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சி தலைவர், மலராத கட்சியுடன் கூட்டணி வச்சதோடு, பயணத்தையும் தொடங்கி நடத்திக்கிட்டு இருக்காரு.. ஆனால் இவர் மீது கட்சியின் ரெண்டாங்கட்ட நிர்வாகிகள் எல்லோருமே ரொம்பவும் கோபமாகத்தான் இருக்காங்களாம்.. சுற்றுப்பயணம் என்ற பெயரில் போகும் இடமெல்லாம் தனக்கென ஒரு கோஷ்டியை உருவாக்கிக்கிட்டு போறாராம்.. இப்படிதான் பிரிந்து கிடப்பவர்களை ஒன்றிணைக்கணுமுன்னு 6 மாஜிக்கள் இலைக்கட்சி தலைவரை போய் பார்த்தாங்களாம்.. இதற்கு தலைமை தாங்கி அழைச்சிக்கிட்டு போனவர் தான் கோபிச்செட்டிப்பாளையத்துக்காரராம்.. எனக்கெதிராக தலையெடுக்க இவ்வளவு தைரியம் எப்படி வந்தது என்ற கேள்வியோடு, அவர் பரிந்துரை செய்தவர்களுக்கு பதவிகள் வழங்காமல், எதிர்கோஷ்டியினருக்கு வழங்கினாராம் கட்சி தலைவர்.. அதேபோல முட்டை மாவட்டத்திலும் ஒரு கோஷ்டியை கொண்டு வந்திருப்பதாக கட்சிக்காரங்க சொல்றாங்க.. மாஜி மீசைக்காரருக்கு எதிராக நகரத்தை சேர்ந்த ஒருவரை களம் இறக்கியிருப்பதாக கட்சிக்காரர்கள் மத்தியில் பேச்சு எழுந்திருக்கு.. இப்படி போகும் இடமெல்லாம் கோஷ்டியை உருவாக்கிக்கிட்டே இருக்காராம்.. அதே நேரத்தில் எல்லோரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற கோரிக்கை கட்சியின் எல்லாதரப்பு நிர்வாகிகள், தொண்டர்களிடையே எழுந்திருக்குதாம்.. என்றாலும் இலைக்கட்சி என்றாலே நான்தான் என்ற எண்ணத்துடன் இருக்கிறாராம் இலைக்கட்சி தலைவர்.. ஆனால் ஆறு மாஜிக்களில் ஒருவர் மீது நடவடிக்கை பாய்ந்திருக்காம்.. மற்றவர்கள் வெளிப்படையாக வெளியே வந்தால் பதவி பறிபோகும் என்று பயந்துபோய் பதுங்கியிருந்தாலும், பாய வேண்டிய நேரத்தில் பாய்வார்கள் என்றும் சொல்லப்பட்டு வருது.. இன்னும் ஓரிரு மாதங்களில் ஒட்டுமொத்த நிர்வாகிகளும் ஒன்றிணைந்து இலைக்கட்சி தலைவருக்கு பாடம்புகட்டுவார்கள் என்பது மட்டும் உறுதின்னு சின்ன மம்மியின் ஆதரவாளர்கள் அடிச்சி சொல்றாங்க..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.