Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஐந்து ரதம்-மாமல்லபுரம்

பல்லவர்களின் கட்டடக்கலையை என்றும் அழியாமல் பறைசாற்றும் குடைவரைக் கோயில்களும், கற்சிற்பங்களும் நிறைந்த மாமல்லபுரம் பல்லவர் காலத்தில் துறைமுக நகரமாக இருந்துள்ளது. பல்லவர் கட்டடக் கலைக்கும், ஆரம்ப காலத் திராவிடக் கட்டடக் கலைக்கும் எடுத்துக்காட்டுகளாக இங்கே ரதக் கோயில்கள் எனப்படும் ஒற்றைக் கற்றளிகளும் இடம் பெற்றுள்ளன. இவை நிலத்தில் ஆங்காங்கே இருந்த பெரிய பாறைகளைச் செதுக்கி அமைக்கப்பட்ட ஒரே வரிசையில் அமைந்துள்ள கோயில்களாகும்.

இவற்றைப் பஞ்ச பாண்டவர் ரதங்கள் எனவும் அழைப்பதுண்டு. இவை ஒவ்வொன்றும் மகாபாரதத்தின் முதன்மைப் பாத்திரங்களான தருமர், வீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன், திரவுபதி ஆகியோரின் பெயராலேயே குறிப்பிடப்படுகின்றன. பஞ்சபாண்டவர்களின் பெயர்களிட்டு அழைக்கப்பட்டாலும், இவை அவர்களுக்குரிய கோயில்களோ அல்லது ரதங்களோ அல்ல. ரதக்கோயில்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு கடவுள்களுக்காக அமைக்கப்பட்டவை.

தர்மரதம் என்பது இவற்றுள் பெரியது சிவனுக்கு உரிய கோயிலாகும். வீமரதம் எனப்படுவது, திருமாலுக்காக அமைக்கப்பட்ட கோயிலாகும். அர்ச்சுன ரதம் என்பது எந்தக் கடவுளுக்காக அமைக்கப்பட்டது என்பதில் பல்வேறு கருத்துகள் நிலவினாலும் பொதுவாக இது முருகக் கடவுளுக்காக அமைக்கப்பட்டது என கூறப்படுகிறது. இதை இன்னொரு சிவன் கோயிலாக அடையாளம் காண்போரும் உண்டு.

நகுல சகாதேவ ரதம் என்பது இந்திரனுக்காக அமைக்கப்பட்ட கோயிலாகக் கருதப்படுகிறது. இது யானையின் பின்பகுதி அமைப்பிலான விமானத்தைக் கொண்டுள்ளது. இவ்வகை விமானத்தைத் தமிழில் தூங்கானை விமானம் என்பர். இக்கோயிலிலும் சிற்பங்கள் இல்லை என்பதுடன் கட்டடம் முற்றுப்பெறாத நிலையிலேயே காணப்படுகின்றது. திரவுபதி ரதம் என்பது சிறு குடில் ஒன்றின் அமைப்பை ஒத்துக் காணப்படும் இக்கோயில் கொற்றவைக்கு உரியதாகும்.

கட்டடக்கலை அடிப்படையில் இக்கோயில்கள் ஒவ்வொன்றும் அக்காலத்தில் வழக்கிலிருந்த வெவ்வேறு கட்டட வகைகளைப் பின்பற்றி அமைந்திருப்பது இவற்றின் தனிச் சிறப்பாகும்.