பிட்டாக இருக்கிறார்கள்... சிறப்பாக ஆடுகிறார்கள் ரோகித், கோஹ்லி ஓய்வுக்கு இப்போது என்ன அவசியம்? பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா கேள்வி
மும்பை: இந்திய கிரிக்கெட்டின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோஹ்லியின் ஒருநாள் கிரிக்கெட் எதிர்காலம் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், இதுகுறித்த அனைத்து வதந்திகளுக்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
2024 டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு, ரோஹித் மற்றும் கோஹ்லி இருவரும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றனர். அதனைத் தொடர்ந்து, கடந்த மே 2025-ல் திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். இதனால், வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற உள்ள ஒருநாள் தொடரே இவர்களின் கடைசி தொடராக இருக்குமோ என்ற யூகங்கள் பரவலாகப் பேசப்பட்டு வந்தன.
இந்த நிலையில், இதுகுறித்து பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா கூறியதாவது:- எந்த ஒரு வீரரையும் ஓய்வுபெறச் சொல்லி நாங்கள் வற்புறுத்த மாட்டோம், அது எங்கள் கொள்கையே அல்ல. ரோஹித்தும், கோஹ்லியும் இன்னும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவில்லையே? அவர்கள் விளையாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். பிறகு ஏன் இப்போதே அவர்களது பிரிவு உபச்சார போட்டி (Farewell match) குறித்து கவலைப்படுகிறீர்கள்? இரண்டு வடிவங்களில் இருந்து ஓய்வு பெறுவது என்பது ஒரு கட்டம், ஆனால் அவர்கள் இன்னும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறார்கள். இதுகுறித்து அதிகம் கவலைப்பட வேண்டாம். ஓய்வு பெறுவது குறித்து அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.
அந்த முடிவை நாங்கள் மதிக்கிறோம். இப்போதே அவர்களுக்கு பிரிவு உபசாரப் போட்டியை ஏற்பாடு செய்கிறீர்களா? விராட் கோஹ்லி மிகவும் ஃபிட்டாக இருக்கிறார், ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடி வருகிறார். இப்போது அவர்களுடைய ஓய்வு பற்றி பேச என்ன தேவை இருக்கிறது? நேரம் வரும்போது அதைப் பார்த்துக் கொள்ளலாம். ராஜீவ் சுக்லாவின் இந்தத் தெளிவான விளக்கத்தின் மூலம், ரோஹித் மற்றும் கோஹ்லியின் ஒருநாள் கிரிக்கெட் ஓய்வு குறித்த முடிவை எடுக்கும் முழு சுதந்திரமும் அவர்களிடமே உள்ளது என்பதை பிசிசிஐ உறுதி செய்துள்ளது.