மண்டபம்:ஆழ்கடலில் பலத்த சூறைக்காற்று வீசி வருவதால் மண்டபம், ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று 2வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா ஆழ்கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. கடல் சீற்றத்துடன் காணப்படுக்கிறது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல நேற்று தடை விதிக்கப்பட்டது. ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் பகுதியில் 1,200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. மண்டபம் பகுதியில் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை மீனவர்கள் கடலில் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர். தடை உத்தரவு இன்று 2வது நாளாக தொடர்வதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
மண்டபம் பகுதியில் நேற்று அதிகாலை முதல் சாரல் மழை இடைவிடாமல் பெய்தது. இதனால், மீன்களை உலர்த்தும் பணி பாதிக்கப்பட்டது. தொழிலாளிகள், பொதுமக்கள் சிரமப்பட்டனர். இன்றும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது : அண்மையில் டிட்வா புயலால் கடலுக்கு செல்ல ஒரு வாரத்திற்கு மேல் தடை விதிக்கப்பட்டது. இதனால் மீன்பிடி பணி பெரிதும் பாதிக்கப்பட்டது. எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. இந்நிலையில், தற்போது ஆழ்கடலில் பலத்த சூறைக்காற்று வீசி வருவதால் மீன்பிடி பணிக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டு அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை. இயற்கை இடற்களால் கடலுக்கு செல்ல முடியாமல் மீனவர்கள் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. விரைவில் நிலைமை சீராகி கடலுக்கு செல்லும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம். இவ்வாறு மீனவர்கள் தெரிவித்தனர்.


