Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.177.16 கோடியில் மீன் இறங்குதளங்கள்,விதை பண்ணை, புதிய அலுவலக கட்டிடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.177 கோடியே 16 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளங்கள், மீன் விதை பண்ணை மற்றும் பயிற்சி மையத்துடன் கூடிய அலுவலக கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், கோடிமுனை கிராமத்தில் ரூ.35 கோடி செலவிலும் மற்றும் பள்ளம்துறை கிராமத்தில் ரூ.26 கோடி செலவிலும் தூண்டில் வளைவுடன் மேம்படுத்தப்பட்டுள்ள மீன் இறங்குதளங்கள், தூத்துக்குடி மாவட்டம், அமலிநகர் கிராமத்தில் ரூ.58 கோடி செலவில் தூண்டில் வளைவுடன் மேம்படுத்தப்பட்டுள்ள மீன் இறங்குதளம், திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு ஏரியில் ரூ.26 கோடியே 85 லட்சம் செலவில் நிரந்தரமாக நிலைப்படுத்தப்பட்டுள்ள முகத்துவாரம், சாத்தான்குப்பம் கிராமத்தில் ரூ.8 கோடி செலவிலும் மற்றும் அரங்கன்குப்பம்,

கூனான்குப்பம் கிராமங்களில் ரூ.6 கோடியே 81 லட்சம் செலவிலும் அமைக்கப்பட்டுள்ள புதிய மீன் இறங்குதளங்கள்,  கடலூர் மாவட்டம், சொத்திக்குப்பம் மற்றும் ராசாப்பேட்டை கிராமங்களில் ரூ.8 கோடியே 50 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய மீன் இறங்குதளங்கள், கள்ளக்குறிச்சி மாவட்டம், வடக்கனந்தல், கோமுகி அணையில் ரூ.5 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய அரசு மீன் விதைப்பண்ணை, சேலம் மாவட்டம்,

மேட்டூர் அரசு மீன் விதைப்பண்ணையில் ரூ.3 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பயிற்சி மையத்துடன் கூடிய ஒருங்கிணைந்த அலுவலக கட்டிடம் என மொத்தம் ரூ.177 கோடியே 16 லட்சம் செலவிலான 9 முடிவுற்ற பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலமாக நேற்று திறந்து வைத்தார்.

இதை தொடர்ந்து, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக மேலாளர் (நிதி) பணியிடத்திற்கு ஒரு நபர், துணை மேலாளர் (பால்பதம்) பணியிடத்திற்கு 21 பேர், துணை மேலாளர் (தர உறுதி) பணியிடத்திற்கு 11 பேர், துணை மேலாளர் (கணினி) பணியிடத்திற்கு ஒரு நபர், செயற்பணியாளர் (ஆய்வகம்) பணியிடத்திற்கு 9 பேர்,

தொழிற்நுட்பர் (கொதிகலன்/ மின்னாளர் / பற்ற வைப்பவர்/ஆய்வகம்/இயக்குபவர்) பணியிடங்களுக்கு 46 பேர் என மொத்தம் 89 பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். பின்னர் 22 கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு முதல்வர் பணி நியமன ஆணைகளை வழங்கினார். பணிக்காலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதார்கள் 17 பேருக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ், தலைமை செயலாளர் முருகானந்தம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளர் என்.சுப்பையன், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் இயக்குநர் இரா.கண்ணன், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் மேலாண்மை இயக்குநர் அண்ணாதுரை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் கே.வி.முரளீதரன், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் (பொறுப்பு) இர.நரேந்திர பாபு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.