Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மீன் வளர்த்த வயலில் நெல் சாகுபடி!

சிறு சிறு ஏரிகள் ஒன்றானது போல் வீட்டைச்சுற்றி மீன் வளர்ப்புக்குளங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றில் சிறிதும், பெரிதுமாக மீன்கள் நீந்துகின்றன. இந்த மீன்களுக்கென்று தீவனம் எதுவுமில்லை. பாசிதான் எல்லாமே. இந்தக் குளங்கள் வெறும் மீன் வளர்ப்புக்குளங்கள் மட்டுமல்ல. நெல்மணிகள் மூட்டை மூட்டையாக விளையும் விளைநிலமும் கூட. இந்த நெல் வயலுக்கென்று எந்த உரங்களும் போடப்படுவதில்லை. மீனின் கழிவுகளும், பாசியின் எச்சங்களும்தான். மீன் வளர்ப்புக்குளம், நெல் வயல் என டூ இன் ஒன் ஆச்சரியம் நிகழும் இந்த நீர்நிலைகளை நிர்வகிப்பவரின் பெயர் பொன்னையன். புதுக்கோட்டையில் இருந்து மணப்பாறை செல்லும் வழியில் பரம்பூர் என்ற கிராமத்திற்குள் சற்று உள்ளடங்கி கிடக்கும் சேந்தாங்கரை என்ற குக்கிராமம்தான் இவரது ஊர். இந்த ஊரில் இருந்துதான் தனது மீன் வளர்ப்பு + நெல் சாகுபடிக்காக ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் பாராட்டுகளைப் பெற்றிருக்கிறார் பொன்னையன். ஜீரோ பட்ஜெட்டில் நிகழும் மீன் வளர்ப்பு, அதன் தொடர்ச்சியான நெல் சாகுபடி குறித்து அறிய சேந்தாங்கரைக்குப் பயணமானோம். நம்மை அழைத்துச் சென்று எல்லாவற்றையும் விலாவாரியாக விளக்கினார் பொன்னையன்.

`` 12வது வரைக்கும்தான் படிச்சிருக்கேன். பாரம்பரியமான விவசாயக்குடும்பம்ங்கறதால படிப்புக்கு அப்புறம் நானும் முழுநேர விவசாயியாக மாறிட்டேன். எங்க ஊருல நெல்தான் அதிகமா விளைவிப்பாங்க. நாங்க எலுமிச்சையும் போடுவோம். எலுமிச்சையில பல சமயம் ரேட் கிடைக்காது. பறிப்புக்கூலி கூட மிஞ்சாது. இதனால வேற ஏதாவது செய்யலாமான்னு யோசிப்போம். 2005ல சூரியகாந்தி போட்டோம். அதுக்கு ஒரு பிரபலமான ரசாயன பூச்சிக்கொல்லியை தெளிச்சப்போ என்னோட உடம்புல இருந்த மயிர்க்கால்கள் மூலமா மருந்து நுரையீரலுக்கு போய் பயங்கர பாதிப்பை ஏற்படுத்திச்சு. ரசாயன மருந்துகள்தான் என்னோட பிரச்னைக்கு காரணம்னு தெரிஞ்சதால இயற்கை விவசாயத்துக்கு வந்தேன். அதுக்கும் இலை, தழை சேகரிப்புன்னு நெறைய வேலை செய்ய வேண்டி இருந்தது. ஒரு கட்டத்துல விதைப்பண்ணை அமைச்சி விதை உற்பத்தியில இறங்குனேன். 2008ல நீர்வளம், நிலவளம் திட்டத்தைக் கொண்டு வந்த தமிழ்நாடு வேளாண்மைத் துறை எங்க ஊரை முன்னோடி கிராமமா தேர்வு செஞ்சிது. தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, மீன்வளத்துறைன்னு 9 துறைகளும் எங்க ஊருல பல திட்டங்களை அமல்படுத்துனாங்க. அப்போ எனக்கு பண்ணைக்குட்டை அமைச்சி மீன் வளர்க்க உதவி பண்ணாங்க. 1000 மீன் குஞ்சுகள், 450 கிலோ தீவனம், வலை, தராசு எல்லாம் கொடுத்தாங்க. மாசம் ஒரு தடவை அதிகாரிங்க வந்து ஆய்வு செய்வாங்க. 8 மாசத்துல ஆயிரம் சதுர மீட்டர் பரப்பு கொண்ட குட்டையில 685 கிலோ மீன் கிடைச்சிது. அதை கிலோ 30 ரூபாய்னு வித்து 20 ஆயிரம் வருமானம் பார்த்தேன். அந்த சமயத்துல ஒரு மூட்டை நெல்லே 650 ரூபாய்தான்.

அதுக்கப்புறம் 2 ஆயிரம் மீன் குஞ்சுகளை குட்டையில விட்டேன். கூடுதலா ஆயிரம் குஞ்சுகளை விட்டேன். இதைப் பார்த்த அதிகாரிங்க 1 சதுர மீட்டருக்கு ஒரு குஞ்சுதான் விடணும், மீதி 2 ஆயிரம் குஞ்சுகளை வேற எங்கியாவது விடுங்கன்னு சொன்னாங்க. அந்த சமயத்துல நாங்க 10 ஏக்கர் நிலத்துல வெள்ளைப்பொன்னி நெல் நட்டிருந்தோம். மழையால அந்தப் பயிர்கள் நிலத்துல சாய்ஞ்சி வீணாயிடுச்சி. 400, 500 மூட்டை விளையுற இடத்துல 30-40 மூட்டைதான் விளைஞ்சது. அந்த நிலம் பள்ளமா இருந்ததால் 1 அடி உயரத்துக்கு தண்ணி நின்னுச்சி. முக்கால் ஏக்கர்ல 1200 மீன்குஞ்சுகளைப் பிடிச்சி விட்டோம். அதுக்கு தீவனம் எதுவும் கொடுக்கலை. நெல்தான் தீவனம். இதுக்கு இடையில பழைய மீன் குட்டையில மீன் பிடிச்சப்ப 620 கிலோ கிடைச்சிது. எங்க ஊருல இருந்த எல்லோரும் மீன் கேட்டு வீட்டுக்கு வர ஆரம்பிச்சாங்க.

கொஞ்ச நாள் கழிச்சி நெல் வயல்ல மீன் பிடிச்சி பார்த்தோம். எங்களுக்கு ஆச்சரியம். 750 கிலோ கிடைச்சிது. 30 ரூபாய் ரேட்டை 60ன்னு மாத்தினோம். இதுல இருந்து 1 அடி தண்ணியிலயே மீன் வளர்க்கலாம், 1 ஏக்கர்ல செலவு இல்லாம 50 ஆயிரம் வருமானம் பார்க்கலாம்னு தெரிஞ்சிக்கிட்டேன். அந்த சமயத்துல கல்கத்தாவுல மீன் வளர்ப்புக்கு பயிற்சிக்காக போனேன். தமிழ்நாட்டுல இருந்து 30 பேர் மட்டும் கலந்துக்கிட்டாங்க. புதுக்கோட்டையில இருந்து நான் மட்டும்தான் போனேன். இதுல சில விசயங்களை தெரிஞ்சிக்கிட்டு மீன் வளர்ப்புல முழுசா இறங்கினேன். அதை நான் ஒரு வித்தியாசமாக செஞ்சேன். அதாவது மீன் வளர்ப்புல இருந்து நெல் விவசாயம், நெல் விவசாயத்துல இருந்து மீன் வளர்ப்பு. 8 மாசத்துல மீன்களை வளர்த்துட்டு, அந்த தண்ணியை வெளியேத்திட்டு, சேத்துல நெல் நட்டேன். உழவு கிடையாது. உரம் கிடையாது. மீன் கழிவுகள் கலந்த சேத்துல நெல் நல்லா விளைஞ்சது.

ஒரு சமயத்துல குட்டையில இருந்த மீன்கள் இறக்க ஆரம்பிச்சது. அம்மோனியம் அதிகமானதுதான் அதுக்கு காரணம்னு சொன்னாங்க. மீனோட எடையில் 2 சதவீதம்தான் தீவனம் கொடுக்கணும்னு சொன்னாங்க. நாங்க அதிகமா கொடுத்ததுதான் இந்த நிலையை உருவாக்குச்சி. அந்த நேரத்துல எங்க ஊருல இருக்குற பெரிய ஏரியை நான் குத்தகை எடுத்து 1500 மீன் குஞ்சுகள் விட்டேன். ஒவ்வொரு மீனும் 3 கிலோ, 4 கிலோன்னு வளர்ந்துச்சி. அந்த ஏரியில பாசிகள் இருந்ததுதான் மீனோட வளர்ச்சிக்கு காரணம்னு தெரிஞ்சிக்கிட்டேன். அதனால் என்னோட வயல்ல பாசியை 45 நாள் வளர்த்து விட்டோம். மீன்கள் அதைச் சாப்பிட்டு பெருக்க ஆரம்பிச்சது. தொடர்ந்து நாங்க மீன் வளர்ப்பு வயல்ல பாசியை விடறோம். இதுதான் இப்போ மீனுக்கு தீவனம்.

இப்போ நாங்க 8 ஏக்கர்ல மீன் வளர்க்குறோம். ஒரு டைம் மீன் வளர்ப்புன்னா அடுத்த டைம் நெல் சாகுபடி. இப்படி மாத்தி மாத்தி செய்றோம். ஏக்கருக்கு 4 ஆயிரம் குஞ்சுகள் விடுறோம். 8 மாசத்துல அறுவடை பண்ணிடறோம். முக்கால் கிலோவுக்கு மேல உள்ள மீன்களை மட்டும்தான் விற்பனை செய்வோம். மத்த மீன்களை வேற குளத்துக்கு மாத்தி விட்டு வளர்ப்போம். அதுங்க வளர்ந்ததும் மீண்டும் பிடிப்போம். தண்ணியை மாத்தி மாத்தி விட்டு வளர்க்குறதால தண்ணி வேஸ்ட் ஆகுறதில்ல. சுழற்சி முறையில பயன்படுத்திக்கிட்டே இருப்போம். இதனால எங்க ஊருல நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திருக்கு. வருசத்துல 12 மாசமும் எங்ககிட்ட மீன் இருக்கும். ஏக்கருக்கு 1 டன் மீன் கிடைக்கும். அதை கிலோ ரூ.200க்கு விற்கிறதால 2 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்குது. செலவு 30 ஆயிரம் போக 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்குது. வருசத்துக்கு 5 ஏக்கருக்கு குறையாம மீன் வளர்க்குறதால 8 லட்ச ரூபாய்க்கு மேல லாபம் கிடைக்குது. நெல் சாகுபடி மூலமாக வருசத்துக்கு இரண்டரை லட்ச ரூபாய் லாபம் கிடைக்குது. மீன் வளர்ப்புக்கும் நெல் சாகுபடிக்கும் என்னோட மனைவி பாக்கியலட்சுமிதான் உறுதுணையா இருக்காங்க. அவங்க பிகாம் வரை படிச்சிருக்காங்க. ஆனா என் கூட தினமும் குளத்துல இறங்கி மீன் பிடிக்கிறது இவங்கதான். நான் இல்லாத சமயத்துல அவுங்க தனியாவே இறங்கி மீன் பிடிச்சி குடுப்பாங்க. என்னோட வெற்றிக்கு அவங்களோட உழைப்பும் காரணமா இருக்கு’’ எனக்கூறி புன்னகைக்கிறார்.

தொடர்புக்கு:

பொன்னையன் - 95663 58151

சிறந்த விவசாயி!

பொன்னையனின் மீன் வளர்ப்பு, நெல் சாகுபடிக்காக தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் வேளாண் செம்மல் விருது வழங்கி சிறப்பித்துள்ளது. ஒன்றிய அரசின் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் சிறந்த நீர்ப்பாசன சங்கத் தலைவர், மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு, நிலத்தடி நீர் சேமிப்பு ஆகியவற்றுக்காக விருது வழங்கி கவுரவித்துள்ளது. நாட்டின் 10 சிறந்த விவசாயிகளில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொன்னையன் குடியரசுத் தலைவரின் தேநீர் விருந்திலும் பங்கேற்று திரும்பி இருக்கிறார்.