Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மீன் வளர்ப்பு

விவசாயத் தொழில் கைவிட்டாலும், விவசாயம் சார்ந்த துணைத்தொழில்கள் சம்சாரிகளுக்கு எப்போதும் கை கொடுக்கத் தவறுவது இல்லை. ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளை வளர்ப்பது போல மீன் வளர்ப்பிலும் பலர் நல்ல வருமானம் பெற்று வருகிறார்கள். மீன் பண்ணையின் மூலம் சரியான வருமானம் பார்க்கலாம் என்பதற்கு உதாரணமாக தனது சொந்த நிலத்தில் குட்டை மற்றும் தொட்டிகள் மூலம் மீன்கள் வளர்த்து வருகிறார் தஞ்சாவூர் சூரக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி முருகேசன்.` எனக்கு சொந்தமாக ஐந்து ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில் பண்ணைக்குட்டை அமைத்து மீன் வளர்த்து வருகிறேன். மீன் குட்டைகளை நர்சரி என்று சொல்வோம். இந்த நர்சரிகளில்தான் பலவகையான மீன்குஞ்சுகளை வளர்த்து வருகிறேன். இந்த நர்சரிகளில் சினை மீன்களை வளர்த்து வருகிறேன். அதுபோக, மற்ற தொட்டிகளில் தனியாக கட்லா, ரோகு, மிருகால், கண்ணாடிக் கெண்டை, பொட்லா, புல் கெண்டை போன்ற வேறு வகையான மீன் குஞ்சுகள் வளர்த்து வருகிறேன். சராசரியாக, இங்கு மீன் குஞ்சுகளுக்காக வளர்க்கப்படும் மீன்களை இரண்டரை வருடத்திற்கு ஒருமுறை மாற்றி புதிய மீன்கள் விடுவோம். காரணம் மூன்று ஆண்டுகள் வரை மட்டுமே சினை மீன்களின் தரம் நன்றாக இருக்கும். அதற்கு பிறகு அதன் முட்டைகளின் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும். தாய்ப்பருவம் என்பது 24 மாதங்கள்தான். அதனால் சரியான நேரத்தில் அதை மாற்றி புதிதாக மீன்களை வாங்கி வந்து மாற்றி விடுவோம். மீன்களுக்கான உணவை சரியான முறையில் வைக்க வேண்டும். தரமான கடலைப் புண்ணாக்குதான் உணவாக போடப்படுகிறது. மேலும் புளோடிங் பீட் உணவும் கொடுக்கப்படுகிறது.

மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை அதிகம் முட்டைகள் இடும் காலம். மே, ஜூன், ஜூலை ஆகியவை கர்ப்பக்காலம். பின்னர் முட்டை மீன் குஞ்சுகள் கிடைக்கும். மீன் வளர்ப்பில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டியது அதிக வெப்பம் நிலவும்போதுதான். அப்போது மீன்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு நர்சரியிலும் ஷவர்கள் அமைத்து தண்ணீர் விடப்படுகிறது. இதனால் குளுமையான காற்றும் தண்ணீரில் ஜிலுஜிலுப்பும் இருப்பதால் மீன்கள் வளர்வதற்கு ஏதுவானதாக இருக்கிறது. குளங்களில் பிராண வாயு உற்பத்திக்கு சூரிய வெளிச்சம் இன்றியமையாதது. அதனால் சூரிய ஒளி குளங்களுக்கு தடையின்றிக் கிடைக்கும் வகையில் அமைக்க வேண்டும்.

கடின உழைப்பும், சரியானபடி மீன்கள் பராமரிப்பும் லாபத்தை அள்ளித்தரும் என்பதில் ஐயமில்லை. பண்ணைக் குட்டைகளில் ஒரு லட்சம் முட்டை மீன்குஞ்சுகளை இட்டு வளர்த்தால் சராசரியாக 40 ஆயிரம் மீன்குஞ்சுகள் கிடைக்கும். ஒவ்வொரு நர்சரியிலும் ஒவ்வொரு வகையான முட்டைமீன் குஞ்சுகள் விடப்படும்.

நாங்கள் மீன்கள் மற்றும் மீன் குஞ்சுகளை விற்பனை செய்கிறோம். இதை வாங்கி செல்பவர்கள் தாங்கள் வைத்திருக்கும் நர்சரிகளில் இதை வளர்த்து பெரியதானவுடன் விற்பனை செய்கிறார்கள். பலர் குத்தகைக்கு நிலத்தை எடுத்து ஏரி, குளங்களில் இவற்றை விட்டு வளர்த்து பின்னர் பெரிதானவுடன் பிடித்து விற்பனை செய்வார்கள். இப்படி தமிழகம் முழுவதும் மீன் குஞ்சுகளை எங்களிடம் இருந்து வாங்கிச் செல்கின்றனர். பல வியாபாரிகளும் வந்து மீன் குஞ்சுகளை வாங்கி குத்தகைக்கு எடுத்து நர்சரிகளில் விட்டு வளர்த்து விற்பதும் நடைமுறை. தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து இங்கு வந்து மீன் குஞ்சுகளை வாங்கிச் செல்கின்றனர்.

வேகமாக வளருவதற்கு மீன் குஞ்சுகளின் தரம் முக்கியமானது. தரமான மீன்குஞ்சுகள் வேகமாக வளரும். அதிக பிழைப்புத்திறனையும் பெறுகின்றன. நர்சரிகளில் மீன்குஞ்சுகளின் தரம், குஞ்சு உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்ட இனப்பெருக்க மீன்களின் தரம், உற்பத்தியான மீன் குஞ்சுகளின் தரம், நர்சரிகளில் நீர்த்தரத்தின் பராமரிப்பு, மீன்களுக்கு அளிக்கப்படும் ஊட்டச்சத்துக்கள், நர்சரிகளில் மீன்குஞ்சுகளில் இருப்பு அடர்த்தி ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். நர்சரிகளில் உள்ள நீரினை சரியாக கவனித்து அவற்றின் நிறம் மாறும்போது மாற்றிவிடுவோம்.

தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் எந்த மாவட்டத்தில் வேண்டுமானாலும் மீன் வளர்க்கலாம். அதேபோல் மீன் வளர்ப்பில் மண் வளத்தையும் நீரையும் கெடுக்காத வகையில் குளத்தைப் பராமரிக்க வேண்டும். சூரிய ஒளி படும் வகையில் கிழக்கு மேற்கில் குளத்தை வெட்டிவிட்டு மீன் குஞ்சுகள் வெளியே போகாத வரையில் கரைகளை அமைத்து, அதன் பின்னர் மீன் குஞ்சுகளை அதில் விட்டு வளர்க்கலாம். காலை மற்றும் மாலை நேரத்தில் தீவனம் கொடுப்பது அவசியம். இரண்டு அங்குலம் அளவுக்கு மீன் குஞ்சுகளை வளர்த்தால் அறுவடை செய்ய 10 மாதங்கள் ஆகும்‌. விரைவில் அறுவடை செய்ய வேண்டுமென்றால் 100 கிராம் குஞ்சுகளை குளத்தில் விட்டு ஒரு சில மாதங்களில் அறுவடையைத் தொடங்கலாம். ஒரு ஏக்கரில் 6 ஆயிரம் குஞ்சுகள் வரை வளர்க்கலாம். ஒரு டன் மீனை வளர்க்க ஒன்றரை டன் அளவிலான தீவனம் தேவைப்படும். ஆனால் நீரும் மண்ணும் சுத்தமாக இருந்தால் தீவன செலவு குறையும். அதேபோல் நீல அமிர்தம், பஞ்சகாவியா போன்றவற்றைத் தெளிப்பதன் மூலம் மீன்களை நோய்த் தொற்றில் இருந்து காப்பாற்றலாம். குளத்தில் ப்ரொபையாடிக்ஸ் எனப்படும் மருந்தைப் பயன்படுத்த வேண்டும். இது கழிவுகளை மீன்கள் உண்ணாத வகையில் அழித்துவிட்டு, முழுமையாக நல்ல தீவனங்களை உண்ணவும் ஆக்சிஜன் கிடைக்கவும் வழிவகை செய்யும்.

நாம் வளர்க்கக்கூடிய ஒவ்வொரு வகையான மீனை மாதம் ஒரு முறையாவது பிடித்து அதை எடை வைத்து அதற்கு தேவையான தீவனத்தை கொடுக்க வேண்டும். கடந்த மாதத்தை விட இந்த மாதம் குறைவான எடை இருந்தால் உடல் எடை அதிகரிக்கக் கூடிய தீவனத்தைக் கொடுக்க வேண்டும். கண்ட தீவனங்களை அதிக அளவில் குளத்தில் கொட்டினால் மண்ணும் நீரும் வீணாகிவிடும். இதனால் மீன் குஞ்சுகள் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். முக்கியமாக மீன் வளர்ப்பைப் பொறுத்தவரையில் 80 சதவீத உணவு இயற்கையாகவே கிடைத்துவிடும். 20 சதவீத உணவை மட்டுமே நாம் அளிக்க வேண்டும். முதல்முறை குட்டை அமைப்பதற்கு மட்டும்தான் அதிகளவு செலவு ஆகும். அடுத்தடுத்த வருடங்களில் மீன் குஞ்சுகள் வாங்கும் செலவு மற்றும் தீவனச்செலவு மட்டும்தான் இருக்கும். நான் பல வருடங்களாக இதே தொழிலில் இருப்பதால், தற்போது தொடர் வருமானம் இந்த மீன் பண்ணைகளில் இருந்து கிடைக்கிறது. இப்போது மாதம் ரூ.40,000 வரை லாபம் எடுத்து வருகிறேன். மீன் வளர்ப்பைப் பொருத்தவரையில் சிலமுறை லாபம் கிடைக்கவில்லை என்றாலும் நஷ்டம் ஏற்பட்டு விடாது. விவசாயம் போல தான் மீன் வளர்ப்பும். இங்கு உற்பத்தி செய்யப்படும் மீன் குஞ்சுகள் தமிழ்நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்படுகிறது. யாராவது செய்ய வேண்டும் என்று எண்ணினால் அதைக் குறைந்த அளவில் முதலில் செய்து அதன் பின்னர் படிப்படியாக ஒரு ஏக்கரில் குளம் வெட்டி அதைச் சுற்றிலும் தென்னை மரத்தை நட்டு சில ஆண்டுகளுக்குப் பிறகு மீன் வளர்ப்பில் கிடைக்கும் வருமானத்தைப் போல தென்னையிலும் வருமானம் பார்க்கலாம் என தெரிவித்தார்.

தொடர்புக்கு:

முருகேசன்- 98653 98579