Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மீன் விற்பனை மையங்களுக்கு ட்ரோன்கள் மூலம் மீன்கள் சப்ளை

*புதிய தொழில்நுட்பம் விரைவில் அறிமுகம்

புதுச்சேரி : விற்பனை மையங்களுக்கு ட்ரோன்கள் மூலம் மீன்கள் சப்ளை செய்யும் தொழில் நுட்பம் புதுச்சேரியில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

புதுச்சேரியில் சிறுமீன்பிடி துறைமுகங்கள், இறங்கு தளங்கள், மீன் பண்ணைகள் உள்ளிட்ட சேகரிப்பு மையங்களிலிருந்து புதுச்சேரியில் உள்ள விற்பனை மையங்களுக்கு புதிய மீன்களை விரைவாகவும், திறமையாகவும் கொண்டு செல்வதற்கான ட்ரோன் பாதையை அடையாளம் காண்பதற்கான திட்டத்தில் புதுச்சேரி மீன்வளத்துறை இணைந்துள்ளது.

மீன்வளத் துறையை நவீனமயமாக்குவதையும், கடைசி புள்ளிவரை எளிதான போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு ட்ரோன் அடிப்படையிலான போக்குவரத்து தீர்வு கொண்டுவரப்பட இருக்கிறது.

சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் விதிகள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்க, புதிதாக பிடிக்கப்பட்ட மீன்களை கொண்டு செல்வதற்கான ட்ரோன் பாதையை அடையாளம் காண தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம், புதுச்சேரி மீன்வளத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இது குறித்து மீன்வளத்துறை செயலர் மணிகண்டன் கூறுகையில், புதிதாக பிடிக்கப்பட்ட மீன்களை நேரடியாக கொண்டு செல்வதற்கு ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை தேசிய மீனவள மேம்பாட்டு வாரியம் ஏற்கனவே நிரூபித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, மேற்கு வங்காளத்தின் பாரக்பூரில் சமீபத்தில் 7 கிமீ தூரத்துக்கு 70 கிலோ புதிய மீன்களை எடுத்துச் செல்லும் திறன் கொண்ட ஒரு கனரக ட்ரோனை உருவாக்கி வெற்றிகரமாக சோதனை நடத்தியுள்ளது.

புதிய மீன்களை ஒரு இடத்திலிருந்து, இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்வது, நீர்த்தேக்கங்கள் மற்றும் கடலுக்குள் கூண்டுகளுக்கான மீன் தீவனத்தை வழங்குவது, மீன் பண்ணைகளை நிர்வகித்தல் மற்றும் பேரிடர்களின் போது மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது உள்ளிட்ட ட்ரோன் செயல்பாடுகளுக்குப் பின்பற்ற வேண்டிய நிலையான இயக்க நடைமுறைகளை உருவாக்க மீன்வள வாரியம் ஒரு ட்ரோன் வழிகாட்டுதல் குழுவையும் அமைத்துள்ளது.

புதுச்சேரி மாநில மீன்வளத் துறை இந்த திட்டத்தில் சேர்ந்து செயல்பட இருக்கிறது. விரைவில் தேசிய மீன் வள மேம்பாட்டு வாரியம் ஒப்புதலுக்காக ஒரு சாத்தியமான ட்ரோன் வழிப்பாதைகளை சமர்ப்பிக்க உள்ளது. இதில் முன்மொழியப்படும் பாதை, தரையிறங்கும் மையங்கள் அல்லது மீன் பண்ணைகள் மீது கவனம் செலுத்தப்படும், இது மீன் சேகரிப்பு, விற்பனை மையங்களுக்கு அருகில் அமைந்திருக்கும்.

சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் வான்வெளி பரிசீலனைகளின்படி, சாத்தியமான நிலபரப்பு அடையாளம் காணப்படும், மேலும் தோராயமான தூரம் 7 கி.மீ.க்கு மிகாமல் இருக்க வேண்டும். செயல்பாட்டு அடிப்படையில், வழியைத் தேர்ந்தெடுத்து, முன்மொழியப்பட்ட ட்ரோன் வழித்தடம் இந்த மாதத்துக்குள் மீன்வள வாரியத்திடம் சமர்ப்பிக்கப்படும், என்றார்.

ப்ரஷ்ஷான மீன்கள் வாங்கலாம்

முன்மொழியப்பட்ட ட்ரோன் அடிப்படையிலான போக்குவரத்து, மீன்கள் கெட்டுப்போவதைக் குறைத்தல், விரைவான விநியோகம், மேம்பட்ட சந்தை அணுகல் மற்றும் மேம்பட்ட மீனவர் வருமானம் உள்ளிட்ட மகத்தான நன்மைகளை வழங்கும் என மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த தொழில்நுட்பம் மீனவர்கள் தங்கள் அதிக மதிப்புள்ள, கூண்டு வளர்க்கப்பட்ட மீன்களுக்கு நியாயமான சந்தை விலைகளைப் பெறுவதை உறுதி செய்யும். தொலைதூர மீன்வளர்ப்பு தளங்களிலிருந்து உயிருள்ள மீன்களை தேவைக்கேற்ப விற்பனை சந்தைகளுக்கு ட்ரோன்கள் திறம்பட கொண்டு செல்ல முடியும். போக்குவரத்து நேரத்தைக் குறைக்கும்.

பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே உற்பத்தி மையங்களிலிருந்து நகரங்கள் மற்றும் நகரங்களில் உள்ள பெரிய சந்தைகளுக்கு புதிய மீன்களைக் கொண்டு செல்வதற்கு தொழில்நுட்ப நெறிமுறைகளின்படி ட்ரோன்களின் பயன்பாட்டை ஆராய பரிந்துரைத்திருந்தார்.

மீன்வளத் துறையில் இந்த தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது ஒட்டுமொத்த உற்பத்தியையும், பதப்படுத்துதல், சந்தைப்படுத்தல் நடைமுறைகளையும் மேம்படுத்த உதவும் என அதிகாரிகள் கூறினர்.