*வஞ்சிரம் கிலோ ரூ.1200க்கு விற்பனை
கடலூர், : கடலூர் துறைமுகத்தில் நேற்று வரத்து குறைவு காரணமாக மீன்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.1200க்கு விற்பனை செய்யப்பட்டது.
கடலூர் துறைமுகத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் தினந்தோறும் விசை மற்றும் பைபர் படகுகளில் மீன் பிடிக்க சென்று வருகின்றனர். கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் மீன் விற்பனை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெறும். இதனை உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் போட்டி போட்டு வாங்கி சென்று வருகின்றனர்.
இந்நிலையில், வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலூர் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதற்கிடையே, கனமழை மற்றும் கடலில் சூறைக்காற்று வீசும் என்ற எச்சரிக்கை காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 19ம் தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் கரைப்பகுதியில் பிடித்து வரப்பட்ட மீன்கள் மட்டும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. வரத்து குறைவு காரணமாக மீன்களின் விலை உயர்ந்தது.
ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.1200க்கும், சங்கரா ரூ.500க்கும், சுறா ரூ.500க்கும், சீலா ரூ.450க்கும், பாறை ரூ.350க்கும், இறால் ரூ.300 முதல் ரூ.400 வரைக்கும், வவ்வால் ரூ.750க்கும், நெத்திலி ரூ.200க்கும் விற்பனை செய்யப்பட்டது. மீன்கள் வாங்க பொதுமக்களின் கூட்டம் குறைவாக காணப்பட்டது.
