மூளைக்கு ஆயிரம் வேலை. அதில் ஒன்றுதான் கனவு காண வைப்பது. நாம் தூங்கும்போது நமது மன ஓட்டங்களைத் தொகுத்து ஏஐ செயலி போல அதுவாகவே சில சம்பவங்களை ஓட்டிப் பார்க்கும். அதுதான் கனவுகளின் பின் இருக்கும் கறாரான உண்மை. ஆனால் நாம் கனவுகள் குறித்து சில கற்பிதங்களை உருவாக்கி வைத்திருக்கிறோம்.அதில் நாம் சாப்பிடும் விசயத்தைக் கூட விட்டு வைக்கவில்லை. சாப்பிடுவது போல் கனவு கண்டாலே சில பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. அதிலும் எந்த உணவுக்கு? எந்த பலன்? எனவும் பகுத்து வைத்திருக்கிறார்கள். இப்படி உருவாக்கி வைத்திருப்பவர்கள் மீனை மட்டும் விடுவார்களா? என்ன? அதற்கும் சில பலன்களைக் கூறி இருக்கிறார்கள். என்ன கூறி இருக்கிறார்கள்?... ஒவ்வொரு சாப்பாட்டுக்கும் ஒரு பலன் இருக்கிறது. மீனுக்கு மட்டும் பிராப்ளமாக இருக்கிறது. அதாவது மீன் சாப்பிடுவது பொதுவாக துர்கனவாம். மீன் சாப்பிடுவது மாதிரி கனவு கண்டால் மோசமான பின்விளைவுகள் உண்டாகுமாம். அதிலும் பச்சை மீன் சாப்பிட்டால் என்ன நடக்கும்? சமைத்த மீன் சாப்பிட்டால் என்ன நடக்கும்? எனவும் விலாவாரியாக விளக்கி இருக்கிறார்கள். மீனை நாம் பொதுவாக குழம்பிலோ, வறுத்தோ சாப்பிடுவோம். அதை சோற்றுடனோ, டிபன் அயிட்டங்களுடனோ சேர்த்து சாப்பிடுவோம்.
அவ்வாறு இல்லாமல் மீனை வெறுமனே சாப்பிடுவது போல் கனவு கண்டால், கனவு கண்டவர் தனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுமாம். அதோடு மட்டுமல்லாமல் குறிப்பிட்ட காலத்திற்கு அவர் விருப்பமின்றி சென்ற இடத்திலேயே இருக்க வேண்டியிருக்குமாம்.மீனை சமைக்காமல் பழங்கால மனிதன் போல் பச்சையாக சாப்பிடுவதுபோல் கனவு கண்டால், குடும்பத்திலும் சரி, உறவுகளிலும் சரி... எதிர்பாராத பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடுமாம். நம்பிக்கைக்கு பாத்திரமான ஒருவரே அவருக்கு எதிராக மாறும் வாய்ப்பு ஏற்படுமாம். குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது அலுவலகத்தில் உள்ள ஒருவர் அவரது நல்ல பெயருக்கு கடுமையான சேதத்தை விளைவிப்பாராம். சமைத்த மீனைச் சாப்பிடுவது போல் கனவு கண்டால், விருப்பமில்லாத இடத்திற்கு திடீர் பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்குமாம். இதனால் பல இன்னல்களையும் சந்திக்க நேரிடுமாம். தான் மட்டுமில்லாமல் மேலும் சிலருடன் சேர்ந்து மீன் சாப்பிடுவதுபோல் கனவு கண்டாலும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுமாம். மேலும் தங்களைப் பற்றிய ரகசியம் கூட கசிய வாய்ப்பு இருக்கிறதாம். இப்படி பல பலன்களைக் கூறி இருக்கிறார்கள்.