*கலெக்டர் தொடங்கி வைத்தார்
ஆற்காடு : ஆற்காடு அருகே நீர்நிலைகளில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டத்தை கலெக்டர் சந்திரகலா தொடங்கி வைத்தார்.
மீன்வளம் மற்றும் மீனவர் நல துறையின் சார்பில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சி துறை நீர் நிலைகளில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்து உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலும், மீன்வளத்தை பெருக்கி மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அரசு கட்டுப்பாட்டில் உள்ள கிராமப்புற நீர்நிலைகள் மற்றும் ஆறுகளில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்படுகின்றன. 6 மாதங்கள் வரை வறட்சியாகாமல் நீர் தேங்கி நிற்கும் நீர்நிலைகள் இதற்காக தேர்வு செய்யப்படுகின்றன.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதேபோல் ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் சர்வந்தாங்கல் ஊராட்சியில் உள்ள ஏரியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சந்திரகலா கலந்துகொண்டு 30 ஆயிரம் மீன் குஞ்சுகளை இருப்பு செய்தார். தொடர்ந்து ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நிகழ்ச்சியில் ஆற்காடு மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாண்டுரங்கன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சரண்யாதேவி, ஆற்காடு ஒன்றிய குழு தலைவர் புவனேஸ்வரி சத்யநாதன்,
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் மெர்சி அமலா, மீன்துறை சார் ஆய்வாளர் விவேக், பிடிஓக்கள் அன்பரசன், வெங்கடேசன், தாசில்தார் மகாலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.