இந்தியாவிலேயே முதன்முறையாக விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் பெண்கள் பாதுகாப்புக்கு சிறப்பு சட்டம்: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு
மதுரை: இந்தியாவில் முதன்முறையாக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவிகள், மகளிர் பாதுகாப்பு குறித்து சிறப்பு சட்டம் இயற்ற நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு தெரிவித்தது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவி, விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டபோது பயிற்சி ஆசிரியரால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், விளையாட்டு பயிற்சி ஆசிரியருக்கு தண்டனை வழங்கியது. அந்த தண்டனையை எதிர்த்து ஆசிரியர் தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த வருடம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், ‘‘விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் பள்ளி மாணவிகளின் பாதுகாப்பு குறித்து அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு உரிய சட்டம் இயற்ற வேண்டும்.
இதுகுறித்து அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நேற்று நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் முன் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் தலைமை குற்றவியல் வக்கீல் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி, ‘‘ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவியர்கள், பெண்கள் நலன் கருதி பல்வேறு சட்ட விதிமுறைகளை வகுத்து பள்ளிக்கல்வித்துறை, விளையாட்டு மேம்பாட்டுத் துறை பின்பற்ற வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் நீதிமன்றத்தின் தீர்ப்புகள் குறித்து காவல்துறை, கல்வித்துறை, விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலர்கள் விரிவான ஆய்வு நடத்தி, விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவிகளின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும் விதமாக தமிழ்நாடு விளையாட்டுச் சட்டம், மாநில விளையாட்டு அமைப்புகளின் பதிவு, சங்க நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பது, மாணவிகள், பெண் விளையாட்டு வீரர்களைப் பாதுகாத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தலைத் தடுத்தல் மற்றும் அதன் மீது எடுக்கப்பட வேண்டிய தண்டனை நடவடிக்கைகள் உள்ளடக்கிய சிறப்பு சட்டம் இயற்றிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டம் வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் அரசால் தாக்கல் செய்யப்படவுள்ளது’’ எ்ன்றார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன், ‘‘இந்தியாவிலேயே முதன்முறையாக, விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவிகள், பெண்கள் நலன் கருதி இதுபோன்ற சட்டம் கொண்டு வர முயற்சித்துள்ள தமிழக அரசு, தலைமை செயலாளர், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றிற்கு பாராட்டுக்கள்’’ என்று தெரிவித்தார். மேலும் நீதிமன்றத்தின் உத்தரவுகளை அரசுக்கு உடனடியாக எடுத்துச் சென்று சட்ட முன் வடிவுகள் கொண்டு வரும் தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா மற்றும் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார் ஆகியோருக்கு பாராட்டுகள் தெரிவித்தார். மேலும் சட்டம் இயற்றப்பட்டது குறித்த விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் மாதத்திற்கு ஒத்தி வைத்தார்.