ஐஐடி வரலாற்றில் முதன்முறையாக 90% உடல் பாதிப்படைந்த பெண் டாக்டர் பட்டம் பெற்று அசத்தல்: முதுகுத்தண்டுவட சிகிச்சை மையம் தொடங்கி மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சேவை
பெரம்பூர்: சமூகத்தில் மாற்றுத்திறனாளிகள் இன்று பல்வேறு துறைகளில் சாதனை படைத்து மற்றவர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக திகழ்கின்றனர். ஒவ்வொரு முறையும் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று முடிந்த அடுத்த சில நாட்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டி நடைபெறும் அதில் பல்வேறு நாடுகளில் இருந்து வந்த வீரர் வீராங்கனைகள் சாதித்து, தங்களது நாடுகளுக்கு பதக்கங்களை வாங்கி செல்வதை நாம் வியப்புடன் பார்த்து வருகிறோம். ஏதோ ஒரு உடல் குறைபாடு ஏற்பட்டு விட்டது என்று முடங்கி வீட்டில் கிடக்காமல் எவ்வாறு சாதிப்பது என்று அடுத்த கட்டத்தை நோக்கி செல்பவர்களுக்கு வெற்றி வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறது என்று கூறலாம். அந்த அளவிற்கு சராசரி மனிதர்களுக்கு இணையாக மாற்றுத்திறனாளிகள் சாதித்து சிகரத்தை தொட்டு வருகின்றனர்.
அந்த வகையில் 90% உடல் பாதிப்புடன் உள்ள மாற்றுத்திறனாளி பெண் ஒருவர், ஐஐடி வரலாற்றில் முதன் முறையாக டாக்டர் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். நாம் சாதிப்பதற்கு எதுவும் தடை இல்லை என்பதற்கு இந்த பெண் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறார். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சீனிவாசன் - விஜயலட்சுமி தம்பதியின் மகள் ப்ரீத்தி. சீனிவாசன் கடந்த 2007ம் ஆண்டு இறந்துவிட்டார். அதன் பிறகு ப்ரீத்தியை அவரது தாய் விஜயலட்சுமி பராமரித்து வந்தார். ப்ரீத்தி 18 வயதில் கல்லூரி முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது, ஒரு சாலை விபத்தில் சிக்கி, அவரது முதுகு தண்டு வடம் செயலிழந்து, கழுத்துக்கு கீழ் எந்த உறுப்புகளும் வேலை செய்யாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
இருப்பினும் அவர் தொடர்ந்து கல்லூரி படிப்பை தொடர முயன்றுள்ளார். ஆனால் இவரை கல்லூரியில் சேர்த்துக் கொள்ள கல்லூரிகள் மறுப்பு தெரிவித்து விட்டன. இதையடுத்து பிஎஸ்சி மெடிக்கல் சோசியலாலஜி என்ற படிப்பை பல்கலைக்கழகம் மூலமாக படித்துள்ளார். அதன் பிறகு எம்எஸ்சி சைக்காலஜி படிப்பை படித்து முடித்தார்.
அப்போது, பல்வேறு மன உளைச்சலுக்கு ப்ரீத்தி ஆளாகியுள்ளார். சில இடங்களில் இவருக்கு என்று தனியாக வீல் சேர் மற்றும் ரேம்ப் உள்ளிட்ட வசதிகளை செய்து தர வேண்டி இருந்தது. இதனால் சிலர் ஏன் உங்களைப் போன்றவர்கள் கஷ்டப்பட்டு இது போன்ற படிப்புகளை படிக்கிறீர்கள் என ப்ரீத்தியிடம் கேட்டுள்ளனர்.
ஆனால் அந்த தடை கற்களை படிக்கற்களாக மாற்றி, தொடர்ந்து ப்ரீத்தி படிப்பில் கவனம் செலுத்தி வந்துள்ளார். இதனிடையே தொடர்ந்து ப்ரீத்திக்கு உள் மனதில் ஒரு விஷயம் உருத்திக் கொண்டே இருந்தது.
நாம் 18 வயது வரை நன்றாகத் தான் இருந்தோம். அதற்கு பிறகு ஏற்பட்ட ஒரு விபத்தில் திடீரென நமது வாழ்க்கை மாறிவிட்டது. இதுபோன்று சிறு விபத்தில் முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்க்கையை பறிகொடுத்த பலரும் எவ்வாறு கஷ்டப்படுவார்கள் என்று எண்ணி, அவர்களுக்கு ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என நினைத்தார். அதனை மனதில் வைத்து திருவண்ணாமலையில் சோல்பீரி (ஆத்ம விடுதலை) என்ற தன்னார்வ அறக்கட்டளை நிறுவனத்தை தொடங்கினார். 20000 சதுர அடியில் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி மாற்றுத்திறனாளிகள் தினத்தில் முதுகுத்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை மையத்தை ப்ரீத்தி தொடங்கினார்.
இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தற்போது இந்த மையத்தில் ஏராளமான முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மையத்தை நடத்திக் கொண்டே பிஎச்டி படித்து, கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை ஐஐடியில் குறிப்பிடத்தக்க குறைபாடுகள் உள்ள மாற்றுத்திறன் பெண்கள் மற்றும் அறிவாற்றல் அழிப்புகள் ஒரு சமூக தண்ணியக்கவியல் சம்பந்தமாக இவர் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். ஐஐடி வரலாற்றில் 90% உடல் குறைபாடு உள்ளவர்கள் இதுவரை டாக்டர் பட்டம் பெற்றதாக சரித்திரம் இல்லை. அதை மாற்றி ப்ரீத்தி சாதித்து காட்டியுள்ளார். இதுகுறித்து பிரீத்தி கூறியதாவது: வாழ்க்கை ஒரு சில வினாடிகளில் நம்மை திருப்பிப்போட்டு விடுகிறது. நாம் உண்டு, நமது குடும்பம் உண்டு என வாழ்ந்து கொண்டிருப்போம்.
ஆனால் அந்த குடும்ப தலைவன் ஏதாவது விபத்துக்குள்ளானால் அந்த குடும்பம் நிலைமை தலைகீழாக மாறிவிடுகிறது. அந்த வகையில் தற்போது முதுகு தண்டுவடம் பாதிப்பு என்பது மிக பெரிய பிரச்னையாக உள்ளது. விபத்தில் இந்த பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை முடிந்து கைகால்கள் செயலிழந்து மரணத்தை நோக்கி வீடுகளில் இருக்க வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. இதனை மாற்றுவதற்காக திருவண்ணாமலையில் இவர்களுக்கு எனறு தனியாக ஒரு பயிற்சி மையத்தை ஆரம்பித்து நடத்தி வருகிறேன். எனக்குத் தெரிந்த நபர் ஒருவர் சமையல்காரராக வேலை செய்து வந்தார். அவர் சைக்கிளில் செல்லும் போது விபத்துக்குள்ளாகி முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு வாழ்க்கை முழுவதும் கை கால்கள் செயல் இழந்த நிலையில் இருந்தார். உடனடியாக இவரது மனைவி வேலைக்கு செல்ல வேண்டிய நிலை வந்தது. குழந்தைகள் படிப்பை விட்டு வேலைக்கு செல்ல வேண்டிய நிலை வந்தது. இவையெல்லாம் என்னை மிகவும் வேதனையில் ஆழ்த்தியது.
குறிப்பாக முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மெடிக்கல் இன்சூரன்ஸில் இந்த பாதிப்பு கவர் ஆகாது. இதுகுறித்து நாங்கள் அரசாங்கத்திடம் விண்ணப்பம் கொடுத்துள்ளோம். முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள் பிசியோதெரபி செய்ய வேண்டும் என்றால் ஒரு நாளைக்கு குறைந்தது 800 ரூபாய் செலவாகிறது. முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு பயிற்சி மையங்கள் மிக மிகக் குறைந்த அளவில் உள்ளது. அதுவும் ஒரு நாளைக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை அவர்கள் பணம் செலவழிக்க வேண்டி உள்ளது. இதை ஏழை மற்றும் நடுத்தர மக்களால் தர முடியாது. தினக்கூலி மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் வேலை செய்யும் போது பல்வேறு சூழ்நிலைகளில் தவறி கீழே விழுந்து முதுகுத்தண்டு வடம் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கிப் போய் உள்ளனர். அவர்களால் இவ்வளவு பணம் கொடுத்து பயிற்சி மையத்திற்கு செல்ல முடியாது. இதனால் அவர்களது குடும்பமே சிதைந்து விடுகிறது. பெரும்பாலும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் இருந்து வெளிவரும் நோயாளிகள் கடனாளியாக தான் வெளியே வருகிறார்கள்.
இவர்களை மனதில் வைத்து நாட்டிலேயே ஒருங்கிணைந்த முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள் பயிற்சி மையமத்தை திருவண்ணாமலையில் ஆரம்பித்து நான் நடத்தி வருகிறேன். நூற்றுக்கணக்கான நபர்கள் படுத்த படுக்கையாக வந்தவர்கள் மற்றும் ஆண்டு கணக்கில் படுக்கையில் இருந்ததனால் ஏற்பட்ட காயங்களுடன் வந்தவர்கள் எல்லாம் தற்போது அவர்கள் சுயமாக தங்களது வேலைகளை செய்ய முடியும் என்ற அளவிற்கு பயிற்சிகள் கொடுத்து அனுப்பி வைத்துள்ளோம். உடல் ரீதியாக மனரீதியாக பொருளாதார ரீதியாக அவர்களுக்கு நல்ல ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுத்துள்ளோம். மாதம் 2000 ரூபாய் குறைந்தபட்ச கட்டணமாக அவர்கள் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளோம். அதுவும் அவர்களது சாப்பாட்டிற்கு. உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடன் இருப்பவர் ஒருவர் என இருவருக்கும் சேர்த்து வெறும் 2000 ரூபாய் கட்டணம் மட்டும் வாங்குகிறோம். அது கூட அவர்களுக்கு இலவசமாக தருகிறார்கள், என்ற ஒரு தாழ்வு மனப்பான்மை வந்து விட கூடாது என்பதற்காக இதனை வாங்குகிறோம்.
இந்த இடத்தில் ஒரு நாளைக்கு ஒருவருக்கு குறைந்தபட்சம் 200 ரூபாய் செலவாகிறது. ரேஷன் அரிசி மற்றும் அரிசி போன்றவற்றை தவிர்த்து திணை வகைகள் போன்ற சத்தான உணவுகளை வழங்குகிறோம். ஒரு மாதத்திற்கு குறைபாடு உள்ள நபர் மற்றும் அவரைப் பார்த்துக்கொள்ள வரும் நபர் என இருவருக்கும் சேர்த்து 12,000 ரூபாய் வரை எங்களுக்கு செலவாகிறது. இதை ஒரு மனநிறைவுடன் செய்து வருகிறேன். தற்போது ஐஐடியில் பிஎச்டி முடித்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளேன். ஐஐடி சரித்திரத்தில் கடந்த 62 ஆண்டுகளில் 90% பாதிப்பு உள்ள ஒருவர் டாக்டர் பட்டம் பெற்றிருப்பது இதுவே முதல் முறை. இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை என்னைப் போன்ற ஒருவர் டாக்டர் பட்டம் பெறுவது. இவ்வாறு அவர் தெரிவித்தார். ஏதோ ஒரு வகையில் உடல் பாதிப்புக்கு உள்ளாகி விட்டது இனி நாம் குடும்பத்திற்கு பாரமாக இருக்கப் போகிறோம் என்று நினைக்காமல் தொடர்ந்து படித்து டாக்டர் பட்டம் பெற்று அதே உடல் குறைபாடு உள்ள நபர்களுக்காக தனியாக ஒரு மையத்தை ஆரம்பித்து நடத்தி வரும் இந்த மங்கையும் ஒரு சாதனை மங்கைதான் என்று கூறினால் அது மிகையாகாது.