அகமதாபாத்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் 140 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்று சாதனை படைத்துள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள, ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, கடந்த 2ம் தேதி அகமதாபாத் நகரில் துவங்கியது.
முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முகம்மது சிராஜ் (4 விக்கெட்), ஜஸ்பிரித் பும்ரா (3 விக்கெட்) பந்துகளில் சிக்கித் திணறி 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதைத் தொடர்ந்து ஆடிய இந்திய அணி பேட்டிங்கிலும் அதகளம் செய்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 121 ரன் எடுத்த நிலையில் நேற்று முன்தினம் 2ம் நாள் ஆட்டத்தை ஆடிய இந்திய அணி அசுர வேகத்தில் ரன்களை குவித்தது.
இந்திய அணியின் கே.எல்.ராகுல் 100, துருவ் ஜுரெல் 125, ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 104 ரன்கள் விளாசியதால், 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 448 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. அதையடுத்து, 286 ரன்கள் பின் தங்கியிருந்த வெஸ்ட் இண்டீஸ் 3ம் நாளான நேற்று 2வது இன்னிங்சை தொடர்ந்தது. நேற்றைய ஆட்டத்தின்போதும் இந்திய பந்து வீச்சாளர்களின் பந்துகளில் அனல் தெறித்ததால் ஆட முடியாமல் திணறிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் விக்கெட்டுகளை மளமளவென இழந்து தவித்தனர்.
45.1 ஓவர்களை மட்டுமே ஆடிய அவர்கள் 146 ரன்னுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டனர். அதனால் இந்திய அணி, ஒரு இன்னிங்ஸ் 140 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று சாதனை படைத்தது. இந்திய அணி தரப்பில், ரவீந்திர ஜடேஜா 4, முகம்மது சிராஜ் 3, குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். இந்த வெற்றியை அடுத்து, இந்தியா 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் வரும் 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை, புதுடெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
* 148 ஆண்டுகளில் முதல் முறை 100 ரன்னில் அவுட்: ராகுல் வரலாற்று சாதனை
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் முதல் இன்னிங்சில் ஆடிய கே.எல். ராகுல் சரியாக 100 ரன் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். இதற்கு முன், நடப்பாண்டில், கடந்த ஜூலை மாதம், இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போதும், ராகுல் சரியாக 100 ரன் எடுத்திருந்தபோது, விக்கெட்டை பறிகொடுத்தார். கடந்த 1877ம் ஆண்டு கிரிக்கெட் துவங்கி, 148 ஆண்டுக்கு பின் முதல் முறையாக, ஒரு காலண்டர் ஆண்டில் இரு முறை 100 ரன்னில் விக்கெட்டை இழந்த வீரர் என்ற சாதனையை, ராகுல் படைத்துள்ளார்.
* ஆட்ட நாயகன் ரவீந்திர ஜடேஜா
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா மகத்தான சாதனை வெற்றி பெற முக்கிய காரண கர்த்தாக்களில் ஒருவராக திகழ்ந்தவர் ரவீந்திர ஜடேஜா. சிறந்த ஆல் ரவுண்டரான அவர் இந்தியாவின் முதல் இன்னிங்சில் 104 ரன் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். தவிர, வெஸ்ட் இண்டீசின் 2வது இன்னிங்சில் மந்திரப் பந்துகளை வீசிய ஜடேஜா 4 விக்கெட்டுகளை பறித்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். இதையடுத்து, முதல் டெஸ்ட் போட்டியின் ஆட்ட நாயகனாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.