Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முதல் சுற்று பொறியியல் கலந்தாய்வில் 19,193 மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை ஒதுக்கீடு

சென்னை: முதல் சுற்று கலந்தாய்வில் 11,359 மாணவர்களுக்கு தற்காலிக சேர்க்கை ஆணை வழங்கப்பட்டுள்ளது. சேர்க்கை ஆணை பெற்ற மாணவர்கள் ஜூலை 23-ம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும். தற்காலிக ஆணை பெற்றவர்கள் ஜூலை 23-க்குள் உதவி மையம் சென்று சேர்க்கையை உறுதி செய்யவேண்டும். ஜூலை 23-க்குள் சேர்க்கையை உறுதி செய்யாதவர்களின் இடங்கள் காத்திருப்பில் உள்ளவர்களுக்கு தரப்படும்.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 417 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு 1.90 லட்சம் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு ஆண்டுதோறும் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் மூலம் நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு கலந்தாய்வில் பங்கேற்க 3.02 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அதில் 2.42 லட்சம் பேர் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றனர். இவர்களுக்கான தரவரிசை பட்டியல் கடந்த ஜூன் 27-ம் தேதி வெளியானது.

இதை தொடர்ந்து, மாணவர் சேர்க்கைக்கான இணையவழி கலந்தாய்வு கடந்த ஜூலை 7-ம் தேதி தொடங்கியது. முதல்கட்டமாக, மாற்றுத் திறனாளி உட்பட சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு 7 முதல் 11-ம் தேதி வரை நடந்தது. இதில் 994 இடங்கள் நிரம்பின. இதையடுத்து, பொதுப் பிரிவினருக்கான முதல் சுற்று கலந்தாய்வு ஜூலை 14-ம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்க 39,145 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் 34,301 பேர் பங்கேற்று, பிடித்தமான கல்லூரிகளை தேர்வு செய்தனர். அவர்களில் 32,663 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் 2,491 மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்தனர். அதில் 2,462 பேருக்கு ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. தொழிற்கல்வி பிரிவில் 1,586 பேர் கல்லூரிகளை தேர்வு செய்த நிலையில், 1,392 பேருக்கு ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. தொழிற்கல்வி பிரிவில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் 214 பேருக்கு ஒதுக்கீடு தரப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 36,731 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் முதல் சுற்று பொறியியல் கலந்தாய்வில் 19,193 மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை ஒதுக்கீடு செய்து 11,359 மாணவர்களுக்கு தற்காலிக சேர்க்கை ஆணை வழங்கப்பட்டுள்ளது. சேர்க்கை ஆணை பெற்ற மாணவர்கள் ஜூலை 23-ம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும். தற்காலிக ஆணை பெற்றவர்கள் ஜூலை 23-க்குள் உதவி மையம் சென்று சேர்க்கையை உறுதி செய்யவேண்டும்

கல்லூரி மாற்றம் கோரும் (‘அப்வேர்டு’) மாணவர்களுக்கு ஜூலை 26-ம் தேதி ஒதுக்கீடு வழங்கப்படும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை https://www.tneaonline.org எனும் தளத்தில் அறிந்து கொள்ளலாம். ஒட்டுமொத்தமாக பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆகஸ்ட் 20-ம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.