சண்டிகர்: இந்தியா மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா மகளிர் அணி அபாரமாக ஆடி 8 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்து, 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. சண்டிகரில் நேற்று நடந்த முதல் ஒரு நாள் போட்டியில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய துவக்க வீராங்கனைகள் பிரதிகா ராவல் (64 ரன்), ஸ்மிருதி மந்தனா (58 ரன்) அபாரமாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 114 ரன் விளாசினர்.
பின் வந்தோரில் ஹர்லீன் தியோல் 54 ரன் குவித்தார். 50 ஓவர் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 281 ரன் எடுத்தது. பின், 282 ரன் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸி அணியின் துவக்க வீராங்கனை கேப்டன் ஆலிஸா ஹீலி 27 ரன், போப் லிட்ச்பீல்ட் 88 ரன் குவித்து ஆட்டமிழந்தனர். அதன் பின் வந்த பெத் மூனி (77 ரன்), அன்னபெல் சதர்லேண்ட் (54 ரன்) அதிரடியாக ஆடி ரன்களை உயர்த்தினர். அதனால், 44.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 282 ரன் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸி அணி இமாலய வெற்றி பெற்றது.