பெங்களூரு: தென் ஆப்ரிக்கா ஏ அணியுடனான முதல் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள தென் ஆப்ரிக்கா ஏ கிரிக்கெட் அணி, இந்தியா ஏ அணியுடன் பெங்களூரு நகரில் அதிகாரப்பூர்வமற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆடியது. கடந்த அக். 30ம் தேதி துவங்கிய இந்த டெஸ்டின் முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 309 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா 234 ரன்களில் ஆல் அவுட்டானது.
அதைத் தொடர்ந்து 75 ரன் முன்னிலை பெற்றிருந்த தென் ஆப்ரிக்கா 2வது இன்னிங்சை ஆடியது. இந்திய அணியின் தனுஷ் கோட்டியன் (4 விக்கெட்), அன்சுல் கம்போஜ் (3 விக்கெட்) ஆகியோரின் அற்புத பந்து வீச்சில் தென் ஆப்ரிக்கா வீரர்கள் சீரான இடைவௌியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். தென் ஆப்ரிக்கா அணியில் அதிகபட்சமாக லெசேகோ செனோக்வனே 37, ஸுபைர் ஹம்சா 37 ரன்கள் எடுத்தனர்.
மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்ததால், 48.1 ஓவரில் தென் ஆப்ரிக்கா 199 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதையடுத்து, 275 ரன் இலக்குடன் இந்தியா ஏ அணி 2ம் இன்னிங்சை துவக்கியது. 3ம் நாளான நேற்று முன்தினம் ஆட்ட நேர முடிவில் இந்தியா-ஏ 4 விக்கெட் இழந்து 119 ரன் எடுத்திருந்தது.
இந்நிலையில் 4ம் நாளான நேற்று இந்திய அணியின் ரிஷப் பண்ட், ஆயுஷ் படோனி ஆட்டத்தை தொடர்ந்தனர். பண்ட் அட்டகாசமாக ஆடி 90 ரன்களில் அவுட்டானார். படோனி 34, பின் வந்த தனுஷ் கோட்டியன் 23, மானவ் சுதர் ஆட்டமிழக்காமல் 20, அன்சுல் கம்போஜ் 37 ரன் எடுத்தனர். அதனால், 73.1 ஒவரில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 277 ரன் எடுத்து, 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
