நாகர்கோவில்: திருமணம் செய்வதாக கூறி சென்னை கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்து, அவரிடம் இருந்து நகை மற்றும் ரூ.7 லட்சத்தை அபகரித்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாகர்கோவில் அருகே வெள்ளமடம் பகுதியை சேர்ந்த 22வயது இளம்பெண், சென்னையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பிஇ படித்து வந்தார். வசதி படைத்த அந்த மாணவிக்கும் பெருவிளை பகுதியை சேர்ந்த பார்த்தீபா(25) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒரே பள்ளியில் படித்துள்ளனர். பார்த்தீபா, மாணவியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி சென்னையில் மாணவி தங்கியிருந்த அறைக்கு சென்றும், வெள்ளமடத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றும் பலமுறை பலாத்காரம் செய்துள்ளார்.
பின்னர் அந்த மாணவியை ஏமாற்றி 6.5 பவுன் நகை, ரூ.7 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை வாங்கியுள்ளார். பணம், நகையை திரும்ப கொடுக்கவில்லை. அவற்றை திருப்பி ேகட்டபோது, மாணவியுடன் சேர்ந்து இருக்கும் போட்டோவை சமூகவலைதளத்தில் பரப்பிவிடுவதாக பார்த்தீபா மிரட்டியுள்ளார். இந்நிலையில் பார்த்தீபாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆன விஷயம், மாணவிக்கு தெரியவந்தது. இது தொடர்பாக அவரிடம் கேட்டதற்கு, ஆத்திரம் அடைந்த பார்த்தீபா தகாத வார்த்தையால் அந்த மாணவியை திட்டி, முகத்தில் ஆசிட் வீசுவதாக மிரட்டியுள்ளார். ஏமாற்றப்பட்ட மாணவி நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் பார்த்தீபா மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.