முதல் கணவன் இருக்கும் நிலையில் காதலனை 2ம் திருமணம் செய்து போலீசில் இளம்பெண் தஞ்சம்: உறவினர்கள் அடிதடி
ஓமலூர்: சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா, கொங்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு(30). இவரது மனைவி பிரியா (24). துணி கடை நடத்தி வருகிறார். ஆனால், வேறு ஒரு துணி கடையில் பிரியா வேலை செய்துள்ளார். அப்போது, சிமெள்ட் கடையில் வேலை செய்யும் சின்னதிருப்பதியை சேர்ந்த ஹரிஷ்குமாருடன்(25) பிரியாவுக்கு, பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறியது. இருவரும் சிவ நாட்களுக்கு முன்பு, ஊட்டிக்கு சென்று, அங்குள்ள முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், கணவர் வீட்டாரால் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி, நேற்று முன்தினம் இரவு ஓமலூர் அனைத்து மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர்.
அங்கு வந்த ராமு மற்றும் உறவினர்கள், காவல் நிலையத்திற்குள் புகுந்து, பிரியாவை தாக்க முயன்றனர். அவர்களை மகளிர் போலீசார் தடுத்து வெளியேற்றினர். ஆனால், வெளியில் நின்ற காதலன் ஹரிஷ்குமார் வீட்டாரை சரமாரியாக தாக்கினர். பின்னர், போலீசார் பிரியாவிடம் நடத்திய விசாரணையில், திருமணமாகி 3 ஆண்டுகளாக கணவர் ராமு, என்னுடன் குடும்பம் நடத்தவில்லை. அதனால், எனது வாழ்க்கையை நானே தேர்வு செய்து கொண்டேன். என்னை காதல் கணவர் ஹரிஷ்குமாருடன் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவித்தார். ராமு தன்னுடன் அனுப்புமாறு கூறினார். போலீசார் நடத்திய நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு இருவரையும் உதறிவிட்டு பெற்றோருடன் செல்கிறேன் என பிரியா தெரிவித்தார். இதையடுத்து, பிரியாவை பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.



