சென்னை: குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்காக கால அவகாசம் முடிவடைந்துள்ளது. இத்தேர்வுக்கு 5.51 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2, குரூப் 2 ஏ பதவியில் காலியாக உள்ள 645 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 15ம் தேதி வெளியிட்டது.
இதில் குரூப் 2 பணியில் உதவி ஆய்வாளர் 6 இடம், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் (மாற்றுத்திறனாளி அல்லாதர்)-1, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் (மாற்றுத்திறனாளிகள்) 1, நன்னடத்தை அலுவலர்-5, சார் பதிவாளர் (கிரேடு 2)- 6, வனவர் 22 இடம் என மொத்தம் 50 இடங்கள் இடம்பெற்றுள்ளன. குரூப் 2ஏ பதவியில் பால் உற்பத்தி மற்றும் பால்வள மேம்பாட்டு துறை முதுநிலை ஆய்வாளர் 65 இடம், இந்து சமய அறநிலையத்துறையில் தணிக்கை ஆய்வாளர் 11, வணிக வரித்துறையில் உதவியாளர் 13, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் 40 என 31 துறையில் 595 இடங்கள் அடங்கும்.
குரூப் 2, 2ஏ தேர்வுக்கு அறிவிப்பு வெளியான நாள் முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பட்டதாரிகள் போட்டு போட்டு விண்ணப்பித்து வந்தனர். இந்நிலையில் தேர்வுக்கு விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்த சுமார் 1 மாதம் கால அவகாசம் நேற்று முன்தினம் நள்ளிரவுடன் முடிவடைந்தது. இந்ததேர்வுக்கு 5 லட்சத்து 51 ஆயிரத்து 452 பேர் விண்ணப்பித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் ெதரிவித்துள்ளனர்.
விண்ணப்பித்துள்ளவர்கள் திருத்தங்களை செய்ய வரும் 18ம் தேதி முதல் முற்பகல் 12.01 மணி முதல் ஆகஸ்ட் 20ம் தேதி பிற்பகல் 11.59 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து குரூப் 2, குரூப் 2ஏ பதவிக்கான முதல்நிலை தேர்வு செப்டம்பர் 28ம் தேதி நடக்கிறது. இதில் தேர்ச்சி பெறுவோர் அடுத்தக்கட்டமாக மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.