தமிழகம் முழுவதும் தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வகுப்புகளில் 25 ஆயிரம் பேர் பங்கேற்பு: முன்பதிவு செய்யாமல் பங்கேற்கலாம்; தீயணைப்புத்துறை அதிகாரிகள் தகவல்
சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று நடந்த தீ பாதுகாப்பு குறித்த ‘வாங்க கற்றுக் கொள்வோம்’ என்ற விழிப்புணர்வு வகுப்புகளில் 24,947 பேர் கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் 375 இடங்களில் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துவது இதுதான் முதல்முறை. இந்த முயற்சியை தீயணைப்புத்துறை இயக்குநரும் டிஜிபியுமான சீமா அகர்வால் முன்னெடுத்துள்ளார். அதன்படி, தீ பாதுகாப்பு விழிப்புணர்வை பொதுமக்களிடையே பரப்புவதற்காக ‘வாங்க காற்றுக்கொள்ளவோம்’ என்ற ஒரு முயற்சியை இத்துறை தொடங்கியுள்ளது. பொதுமக்களை அருகிலுள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்திற்கு அழைத்து அத்தியாவசிய தீ பாதுகாப்பு நடவடிக்கைகளை கற்பிக்கும் வகையில் விழிப்புணர்வு திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் உள்ள 375 தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்களில் உள்ள பணியாளர்கள் நேற்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வகுப்புகளை நடத்தினர். மயிலாப்பூரில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை அத்துறை இயக்குநர் சீமா அகர்வால், இணை இயக்குநர் சத்தியநாராயணா மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். இந்த வகுப்புகள் ஒரு நாளைக்கு 3 என்ற விகிதத்தில் நடக்கிறது. அதன்படி மாநில முழுவதும் உள்ள 375 தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்களில் நேற்று காலை 10 முதல் 11 மணி வரை நடந்த வகுப்புகளில் 9,324 பேரும், மதியம் 12 மணி முதல் 1 மணி வரை 8,342 பேரும், மாலை 4 மணி முதல் 5 மணி வரை 7,281 பேர் என மொத்தம் 24,947 பேர் கலந்து கொண்டனர்.
மேலும் சென்னையில் நடந்த விழிப்புணர்வு வகுப்புகளில் காலை 10 மணி முதல் 11 மணி வரை 1,059 பேரும், 12 மணி முதல் 1 மணி வரை 1,035 பேரும், 4 மணி முதல் 5மணி வரை 817 பேர் என மொத்தம் 2,911 பேர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து இரண்டாவது நாட்களாக இன்றும் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு வகுப்புகள் 375 தீயணைப்பு நிலையங்களில் மூன்று விகிதமாக நடக்கிறது. இதில் ஏதேனும் ஒரு அமர்வில் கலந்து கொண்டு பொதுமக்கள் பயன்பெறலாம். இத்திட்டம் முற்றிலும் இலவசமானது.