Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

துணை இயக்குநர் ஆபீசில் லஞ்சப்பணம் பறிமுதல்: தீயணைப்பு வீரர் உட்பட 2 பேர் அதிரடி கைது

நெல்லை: நெல்லை தீயணைப்புத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.2 லட்சத்து 51 ஆயிரத்து 400 லஞ்சம் சிக்கிய விவகாரத்தில், தீயணைப்பு துறை ஊழியரே லஞ்ச பணத்தை வைத்துச் சென்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக தீயணைப்பு வீரர் மற்றும் அவரது உறவினர் என 2 பேர் கைது செய்யப்பட்டனர். நெல்லை, என்.ஜி.ஓ. காலனியில் தீயணைப்புத்துறை மண்டல துணை இயக்குநர் அலுவலகம் உள்ளது. இங்கு துணை இயக்குநராக சரவணபாபு என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த அலுவலகத்தில், கடந்த 18ம் தேதி, லஞ்ச ஒழிப்பு போலீசார் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திடீரென நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது அவரது அலமாரியில் இருந்து கட்டுக் கட்டாக கவர்களில் பணமும், அவரது டிரைவர் செந்தில்குமாரிடம் இருந்தும் என கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 51 ஆயிரத்து 400 கைப்பற்றப்பட்டது.

இதையடுத்து துணை இயக்குநர் சரவணபாபு மற்றும் அவரது ஓட்டுநர் செந்தில்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் தீயணைப்புத் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் திடீர் திருப்பமாக லஞ்சப் பணம் கைப்பற்றப்பட்டதற்கு முந்தைய நாள் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் துணை இயக்குநர் அலுவலகத்திற்கு பைக்கில் வந்து கையில் ஒரு பையுடன் நுழையும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சிசிடிவி காட்சிகள் ஆதாரத்துடன் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமாணியிடம் துணை இயக்குநர் சரவணபாபு புகார் அளித்தார். அப்போது தனது நேர்மையான செயல்பாடுகளால் பாதிக்கப்பட்ட துறை சார்ந்தவர்களே இந்த சதியில் ஈடுபட்டிருக்கலாம் என அவர் சந்தேகம் தெரிவித்தார்.

அவர் அளித்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, நெல்லை மாநகர துணை கமிஷனர் வினோத் சந்தாராம் மேற்பார்வையில், பெருமாள்புரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், தீயணைப்புத் துறை அலுவலகத்தில் பணத்தை வைத்துச் சென்ற சம்பவத்தின் பின்னணியில், தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு அலுவலத்தில் தீயணைப்பு வீரராகப் பணியாற்றும் ஆனந்த் (30) இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஆனந்தும், அவருக்கு உடந்தையாக இருந்த உறவினர் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர் முத்துச்சுடலை என்பவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்பட்டது தெரியவந்தது.

துணை இயக்குநர் சரவணபாபு, முன்னதாக நாகர்கோவிலில் பணியாற்றியபோது, ஒரு கல்லூரி மற்றும் பிரபல ஜவுளி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட தீயணைப்புத் தடையில்லா சான்றிதழ் போலியானது என்பதைக் கண்டுபிடித்து, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த வழக்கில், ஒரு தீயணைப்பு வீரர் கைது செய்யப்பட்டார். இதனால் அவரை பழிவாங்கும் நோக்கில் இந்த செயலில் யாரும் ஈடுபட்டனரா என்றும் இந்த சம்பவத்தில் சில உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதனால், இந்த வழக்கில் மேலும் பலர் சிக்குவார்கள் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

வாட்ஸ் அப் குழு

தீயணைப்புத்துறை உயர் அதிகாரிகளை சிக்க வைக்க வாட்ஸ்அப் குழு ஏற்படுத்தி நெட்வொர்க் அமைத்து செயல்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சரவணபாபுவின் அலுவலக அறையில் பணம் வைத்ததாக ரகசிய தகவல்களின் அடிப்படையிலேயே லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர். இதில், அரசுத்துறையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு தகவல் கொடுத்தது தெரியவந்துள்ளது. எனவே அவருக்கும் இந்த சதியில் தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.