விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீசார் பட்டாசு கடைகள் நடத்தி வருவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து மாவட்ட எஸ்பி கண்ணன் உத்தரவின்பேரில், தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்தனர்.
இதையடுத்து பட்டாசு கடைகள் நடத்தி வந்ததாகவும், முறையாக பணி செய்யாமல் இருந்ததாகவும் கூறி, 8 போலீசாரை, எஸ்பி பரிந்துரையின் பேரில், பணியிட மாற்றம் செய்து, தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவிட்டார்.
அதன்படி, விருதுநகர் ஆயுதப்படையில் பணிபுரிந்த சீனிவாசன், கட்டனூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்த தங்கமுத்து, சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர் பழனியப்பன் உள்ளிட்ட 8 பேர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு இடமாறுதல் செய்யப்பட்டனர்.