தொழிலாளர்களின் நலன் காக்க பட்டாசு உற்பத்தி கழகம் அமைக்கக் கோரி வழக்கு: ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
மதுரை: தொழிலாளர்களின் நலன் காக்க பட்டாசு உற்பத்தி கழகம் அமைக்கக் கோரிய வழக்கில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தரப்பில் பதிலளிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த செல்வகுமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: இந்தியாவின் பட்டாசு உற்பத்தியில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது.
தமிழ்நாட்டில் விருதுநகர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் பட்டாசு உற்பத்தி பிரதான தொழிலாக உள்ளது. மிகப்பெரிய பட்டாசு நிறுவனங்கள் சிவகாசியில் உள்ள சிறு, சிறு வியாபாரிகளிடம் பட்டாசுகளை உற்பத்தி செய்து வாங்கி பெரும் விலைக்கு விற்பனை செய்கின்றனர். ஆனால், பட்டாசு உற்பத்தி பெரும்பாலும் சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் நடைபெற்று வருகிறது. இது தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தலாகவும், உயிருக்கு அழிவாகவும் மாறியுள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 450 பதிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. இதில் நேரடி தொழிலாளர்களாக 40 ஆயிரம் மற்றும் மறைமுக தொழிலாளர்களாக பல லட்சம் பேரும் பணியாற்றுகின்றனர்.
2024 முதல் கடந்த ஆகஸ்ட் 2025 வரை பட்டாசு சம்பந்தமான விபத்துகளில் 77 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு, கட்டிட அழிவு, உற்பத்தி இழப்பு, சுற்றுப்புறச் சூழல் கேடு, தொழிலாளர் மற்றும் பொதுமக்களுக்கு நஷ்டங்கள் ஏற்படுகின்றன. பல பட்டாசு தொழிற்சாலைகள் மிகவும் குறைந்த வாடகையில் இடங்களை ஒப்பந்தமிட்டு ஏழை தொழிலாளர்களை பாதுகாப்பற்ற சூழலில் பணியமர்த்துகின்றனர்.
ஏழை தொழிலாளர்களுக்கு உரிய காப்பீடு, அடிப்படை வசதிகள், உரிய மருத்துவ வழிகாட்டுதல்கள், பட்டாசு விபத்து குறித்து உரிய விழிப்புணர்வு உள்ளிட்டவை வழங்குவதில்லை. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் பட்டாசு உற்பத்திக்கு பல்வேறு வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டுமென உத்தரவிட்டிருந்தாலும், அவை முறையாக பின்பற்றப்படுவதில்லை. இதனால் தொடர் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.
எனவே, இவற்றை கருத்தில் கொண்டு பட்டாசு தொழிலை பாதுகாக்கவும், தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிடவும் பட்டாசு உற்பத்தி கழகத்தை அமைக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் ஆகியோர், இதே கோரிக்கை தொடர்பாக ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள மனுவுடன் சேர்த்து பட்டியலிடுமாறும், மனுவிற்கு ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு தரப்பில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.