புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்புள்ள அவசர சிகிச்சை பயன்படுத்தும் மருத்துவ கருவிகள், உபகரணங்கள் எரிந்து சேதமடைந்தது. புதுக்கோட்டையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு உள்நோயாளிகளாக சுமார் 1000 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் புறநோயாளிகளாக தினமும் 2ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் இங்கு தரைதளத்தில் தீவிர சிகிச்சை பிரிவு, புறநோயாளிகள் வருகை பதிவு அறை மற்றும் உயர் சார்பு அலகு(high dependency Unit) வார்டு இயங்கி வருகிறது. இதில் ஹெச்டியு வார்டு என்பது தீவிர சிகிச்சை பிரிவை(ஐசியு) போல தீவிரமான கவனிப்பு தேவைப்படாத, ஆனால் பொது வார்டை விட அதிக கண்காணிப்பு மற்றும் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கான ஒரு சிறப்பு பிரிவாகும்.
இந்த வார்டில் 20 படுக்கை வசதி உள்ளது. தற்போது இந்த வார்டில் நோயாளிகள் யாரும் இல்லை. இந்நிலையில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் ஹெச்டியு வார்டில் தீவிபத்து ஏற்பட்டு அறை முழுவதும் புகை மண்டலமானது. புகை குபுகுபுவென கிளம்பியதால் அந்த கட்டிடத்தில் இருந்த தரைதளம் முழுவதும் புகை மண்டலமானது. இதனால் அச்சமடைந்த மற்ற வார்டுகளில் இருந்த நோயாளிகள், அவர்களது உதவியாளர்கள் வார்டுகளை விட்டு வெளியேறினர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து டீன் கலைவாணி புதுக்கோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து புதுக்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து அரை மணி நேரம் போராடி தீயை அணைத்ததுடன், புகையை கட்டுப்படுத்தினர். தீ விபத்தில் அந்த வார்டில் இருந்த ஆக்சிஜன் கருவிகள், உபகரணங்கள், படுக்கைகள் என பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.