Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அக்னிபரீட்சை

மோடி 3.0. அப்படித்தான் சொல்கிறார்கள். ஆனால் இது அவ்வளவு எளிதல்ல. அது மோடிக்கும் தெரியும். 2014, 2019ல் மிருக பலம். தனி மெஜாரிட்டி. நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்ய முடிந்தது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு என்று சொல்லிக்கொண்டாலும், அப்போது அவர்கள் குரலுக்கு எந்த மதிப்பும் இல்லை. அவர்களை மோடி மதித்ததும் இல்லை. இப்போது நிலைமை தலைகீழ். பா.ஜ வென்ற தொகுதி 240 மட்டுமே. தனி மெஜாரிட்டிக்கு இன்னும் 32 எம்பிக்கள் தேவை.

அதனால் கூட்டணி கட்சிகளிடம் கையேந்தி நிற்க வேண்டிய நிலை. தேசிய ஜனநாயக கட்சிகள் கூட்டத்திலும், மோடி பதவி ஏற்பு விழாவிலும் இது தெளிவாக தெரிந்தது. 2019ல் கூடுதலாக ஒரு அமைச்சர் பதவி கேட்டார் நிதிஷ்குமார். கொடுக்க மறுத்துவிட்டார் மோடி. பதில் பேசாத நிதிஷ்குமார், ஒன்றிய அரசில் நாங்கள் பங்கேற்கப்போவது இல்லை என்று அறிவித்து விட்டு பீகார் சென்றுவிட்டார். இன்று நிதிஷ் கேட்டதையும், அதற்கு மேலும் போட்டுக்கொடுக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார் மோடி.

அதை விட முக்கியமாக தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபுநாயுடுவை சமாளிக்க வேண்டும். அவர் கேட்ட பதவிகள் கொடுக்கப்பட்டு விட்டன. ஆனால் சபாநாயகர் பதவியையும் சேர்த்து கேட்கிறார் சந்திரபாபுநாயுடு. இது மைனாரிட்டி அரசு. இதை திறம்பட வழிநடத்த வேண்டும் என்றால் மக்களவை தலைவராக பா.ஜவை சேர்ந்தவர், அதுவும் மோடியின் கண் அசைவுப்படி நடப்பவர் தான் தேவை. அதற்காக சிலரை மோடி தேர்வு செய்து வைத்து இருக்கும் இந்த நேரத்தில் சந்திரபாபுநாயுடு, கண்டிப்பாக சபாநாயகர் பதவி வேண்டும் என்று பிடிவாதம் காட்டுகிறார்.

அவரை சமாளிக்க நாட்டின் மிகப்பெரிய சாணக்கியர் என்று அழைக்கப்படும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஆந்திரா அனுப்பி வைத்து இருக்கிறார் மோடி. உள்துறை அமைச்சராக பதவி ஏற்ற கையோடு, சந்திரபாபு நாயுடுவை சமரசப்படுத்தும் பணி இப்போது அமித்ஷாவுக்கு வந்து இருக்கிறது. 2014, 2019ல் அவர் ஆட்டுவித்த அரசுகள் என்ன?, அடக்கி ஒடுக்கிய அரசியல் தலைவர்கள் எத்தனை பேர்?. இப்போது எல்லாம் மாறிவிட்டது.

காலம் சுழன்றுவிட்டது. மீண்டும் கையேந்தும்படலம் தொடங்கி விட்டது. வேறுவழியில்லை. அன்று குஜராத் முதல்வராக இருந்த போது மன்மோகன்சிங் தலைமையிலான கூட்டணி அரசை எத்தனை கேலி, கிண்டல் செய்தார் மோடி. இன்று அதே நிலை மோடிக்கு. அமைச்சரவை பட்டியலைக்கூட அறிவிக்க 24 மணி நேரம் மோடி எடுத்துக்கொண்டதும் இப்போதுதான். அதிலும் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி, மோடி ஒதுக்கிய இணை அமைச்சர் பதவியை ஏற்க மறுத்துவிட்டது முதல் அவமானம்.

அடுத்ததாக மகாராஷ்டிரா முதல்வர் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 7 எம்பிக்கள் வைத்திருக்கும் எங்களுக்கு ஒரு இணை அமைச்சர் பதவி தானா என்று மோடியின் முகத்துக்கு நேராக கேள்விக்கணைகளை வீசியிருக்கிறது. பதில் சொல்ல வேண்டிய இடத்தில் மோடி இருக்கிறார். முன்பு போல் எதையும் கண்டும்காணாமல் அவரால் போய்விட முடியாது. அல்லது மணிப்பூர் போல் எட்டிப்பார்க்காமல் இருந்து விட முடியாது.

இது கூட்டணி அரசு. கூட்டணிக்கட்சிகளின் தயவால் நடக்கும் அரசு என்பது யாருக்கு புரிகிறதோ இல்லையோ, நிச்சயம் மோடிக்கு நன்றாக புரியும். நிதிஷ், சந்திரபாபு நாயுடு மட்டுல்ல, அஜித்பவார், ஷிண்டே, ஜித்தன்ராம் மஞ்சி, சிராக் பஸ்வான் என ஒரு எம்பி வைத்திருக்கும் கூட்டணிக்கட்சி தலைவர்களின் கேள்விக்கு கூட நின்று நிதானமாக, அவர்கள் சமரசம் அடையும் வரை பதில் சொல்ல வேண்டியது கட்டாயம். ஏனெனில் இது அக்னிபரீட்சை காலம்.