*600 பேர் பங்கேற்பு
தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில், 6 தீயணைப்பு நிலையங்களில் பொதுமக்கள் கலந்து கொள்ளும், தீ பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி நிகழ்ச்சியில் 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை இயக்குனர் உத்தரவின்பேரில், தீ பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி நடத்த உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, தர்மபுரி மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா தலைமையில், மாவட்டத்தில் உள்ள 6 தீயணைப்பு மீட்பு பணி நிலையங்களிலும் ”வாங்க கற்றுக்கொள்ளுவோம் ” என்ற தலைப்பில், தீ பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த 11, 12ம் தேதிகளில் நடந்தது. 600க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு தீயணைப்பு நிலையங்களில் அத்தியாவசிய தீ பாதுகாப்பு நடைமுறைகள் கற்றுக்கொடுக்கப்பட்டது.
அதாவது பள்ளிகள், கல்லூரிகள், அடுக்குமாடி குடியிருப்புகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், ரயில் மற்றும் பேருந்துகள், அலுவலகங்கள், திறந்தவெளி காடு போன்ற பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டால் பாதுகாப்பாக எவ்வாறு வெளியேறுவது?, அணைப்பது பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் மரப்பொருட்கள் தீ விபத்து, சிலிண்டர் தீ விபத்து, மின்சார தீ விபத்து, உலோக தீ விபத்துகளை எவ்வாறு பாதுகாப்பாக தீயை அணைப்பது என்பது பற்றியும் பொதுமக்களுக்கு விரிவாக பயிற்சி அளிக்கப்பட்டது.
தர்மபுரியில் நடந்த தீயணைப்பு நிலையத்தில், 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இதில் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் அம்பிகா, நிலைய அலுவலர்கள் கன்னியப்பன், வெங்கடேஷ் மற்றும் வீரர்கள் கலந்து கொண்டனர்.
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலக வளாகத்தில், நிலைய அலுவலர் செந்தில் தலைமையில் வாருங்கள் கற்றுக் கொள்ளுங்கள் எனும் அடிப்படையில், தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு, பாதுகாப்பு ஒத்திகை, அவசர காலங்களில் செயல்படும் முறை, குறித்து செயல்முறை விளக்கம் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.