டெல்லி: 2024-25 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று(செப்டம்பர்.15) கடைசி நாள். வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு நீட்டிக்கப்பட்ட அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்றைக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை எனில் அபராதம் விதிக்கப்படும்.
2024-25ம் நிதியாண்டில் ஈட்டிய வருமானத்திற்கான வருமான வரி தாக்கல் செய்யும் அவகாசத்தை ஜூலை 31ம் தேதியிலிருந்து செப்டம்பர் 15ம் தேதி வரை நீட்டித்து வருமான வரித்துறை கடந்த மே மாதம் அறிவித்தது. இந்த கூடுதல் அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. அதன்பின் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய அபராதம் செலுத்த வேண்டும்.
இந்நிலையில் நேற்று வருமான வரித்துறை அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பதிவில், ‘‘இதுவரை 6 கோடிக்கும் அதிகமானோர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர். இந்த மைல்கல்லை அடைய உதவிய வரி செலுத்துவோர் மற்றும் வரி நிபுணர்களுக்கு நன்றி. ஐடிஆர் தாக்கல் செய்யாத வரி செலுத்துவோர் கடைசி நிமிட அவசரத்தை தவிர்க்க விரைவில் ரிட்டன்களை தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்’’ என தெரிவித்துள்ளது.
கடந்த 2023ல் 6.77 கோடி பேரும், 2024ல் 7.28 கோடி பேரும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.