நிதி முறைகேடு புகாரில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வக்பு வாரிய தலைவர் பதில் தர நோட்டீஸ்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையைச் சேர்ந்த வக்கீல் பயாஸ் அகமது, வக்பு வாரியத் தலைவரும், ராமநாதபுரம் எம்.பி.யுமான நவாஸ் கனிக்கு எதிராக தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், வாலாஜா பஜார் மசூதி நிதியை முறைகேடு செய்து விட்டதாக எச்.ஆர்.திப்பு என்பவருக்கு எதிராக ஆதாரத்துடன் வக்பு வாரியத்தில் 2022 செப்டம்பர் 15ம் தேதி புகார் அளித்தேன். இதுகுறித்து வக்பு வாரியத்தின் சூப்பிரண்டு, இருதரப்பினரிடமும் 2023 டிசம்பர் 27ம் தேதி விசாரித்து அறிக்கையை தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவரிடம் சமர்ப்பித்தார். ஆனால், இறுதி உத்தரவு பிறப்பிக்கவில்லை.
எனவே, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இருதரப்புக்கும் வாய்ப்பு கொடுத்து விசாரித்து இறுதி உத்தரவை பிறப்பிக்கவேண்டும் என 2024ல் பிப்ரவரி 28ம் தேதி உத்தரவிட்டது. ஆனால், இதுவரை இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை. எனவே, நவாஸ் கனி மீது நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, இந்த மனுவுக்கு வரும் 19ம் தேதிக்குள் நவாஸ் கனி பதில் தரவேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.