சென்னை: சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் பண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கு மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அந்த நிதி நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ் உள்பட 6 பேரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி தேவநாதன் தாக்கல் செய்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, முதலீட்டாளர்கள் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் திருமூர்த்தி, தேவநாதன் யாதவ் 680 கோடி ரூபாய் முதலீட்டாளர்களிடம் ஏமாற்றி உள்ளார். சென்னை அண்ணா சாலை, மயிலாப்பூர், அண்ணா நகர் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட இடங்களில் அவருக்கு சொத்துகள் உள்ளன. அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது.
இதையெல்லாம் மறைத்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார். இதையடுத்து, நீதிபதி, தேவநாதன் யாதவின் முழு சொத்து விவரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 17ம் தேதிக்கு தள்ளிவைத்தார். குறைந்தபட்சம் 300 கோடி சொத்து மதிப்பையாவது அன்றைய தினம் காட்டினால் ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.