பல கோடி நிதி மோசடி வழக்கில் கைதான தேவநாதன் யாதவ் சரணடைய மேலும் ஒரு வாரம் அவகாசம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவின் இடைக்கால ஜாமீனை நவம்பர் 7ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த ‘‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் பண்ட்’’ நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கு மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக நிதி நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ் உள்பட 6 பேரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி மூன்றாவது முறையாக தேவநாதன் யாதவ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி, அக்டோபர் 30ம் தேதி வரை இடைகால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி கே.ராஜசேகர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தேவநாத யாதவ் தரப்பில் இடைக்கால ஜாமீனை நீட்டிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.
அப்போது, காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் ராஜ்திலக் ஆஜராகி, தேவநாதன் யாதவின் 76 சொத்துகள் பட்டியலில் 27 சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றார். பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் ஆஜராகி, சொந்த பணமாக 100 கோடி ரூபாயை திரட்டி நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் நீதிமனறத்தில் டெபாசிட் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டும் 1 ரூபாய் கூட நீதிமன்றத்தில் தேவநாதன் யாதவ் டெபாசிட் செய்யவில்லை, எனவே, ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தேவநாதன் யாதவ் சரணடைய மேலும், ஒரு வாரம் அவகாசம் வழங்கியதுடன், ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயசந்திரன் முன்பு வழக்கை பட்டியலிடுமாறு பதிவுதுறைக்கு உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 7ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
