Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டின் நிதி பற்றாக்குறை குறைப்பு; 505 தேர்தல் வாக்குறுதிகளில் செயற்பாட்டில் 404 திட்டங்கள்: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

சென்னை : சென்னை தலைமை செயலகத்தில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் ஆகியோர் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது: பொருளாதார வளர்ச்சியில் எடுத்து கொண்டால், உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 0.07 சதவீதமாக இருந்தது 2024-25ம் ஆண்டு இரட்டை இலக்கு வளர்ச்சி முதல்முறையாக பெறப்பட்டு 11.19 சதவீதமாக வளர்ந்துள்ளோம். நிதிப்பற்றாக்குறை, வருவாய் பற்றாக்குறை 2021ல் ஆட்சிக்கு வரும்போது 3.49 சதவீதமாக இருந்தது இப்போது 1.17 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. நிதிபற்றாக்குறை 4.91 சதவீதமாக இருந்தது தற்போது 3 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு குறியீடுகளின் அடிப்படையில் ஒன்றிய அரசின் அறிக்கையின் படி சமூக வளர்ச்சியில் தமிழ்நாடு முதல் இடம். மின்னணு பொருட்கள் ஏற்றுமதி, ஏற்றுமதியில் தயார் நிலை குறியீடு, தோல், ஜவுளி பொருட்கள் உள்ளிட்டவற்றில் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளோம். அதேபோல் காலணி, தோல் பொருட்கள் உற்பத்தியில் இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 38 சதவீதம் தமிழ்நாடு உள்ளது. பெண் காவலர்கள் அதிகாரிகளின் அடிப்படையில் முதல் இடத்தில் உள்ளோம். இவ்வாறு ஒவ்வொரு துறையையும் எடுத்துக்கொண்டால் மாநிலத்தின் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

திமுகவின் 505 தேர்தல் வாக்குறுதிகளில் 364 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 40 திட்டங்கள் அரசின் பரிசீலனையில் இருக்கின்றன. மொத்தம் 404 திட்டங்கள் தற்போது செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. ஒன்றிய அரசிடம் 37 திட்டங்கள் நிலுவையில் உள்ளன. 64 திட்டங்கள் நடவடிக்கைக்கு எடுத்துக்கொள்ள முடியாதவையாக உள்ளது. வேலூர், கரூர், ஓசூர், ராமநாதபுரம் ஆகிய நகரங்களில் புதிய விமான நிலையங்கள் அமைப்பதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளோம்.

மின்னணு பொருள் ஏற்றுமதியில் முதலிடம், ஏற்றுமதி தயார் நிலை குறியீடு, தோல் ஜவுளி பொருள் ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம். மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கைகளிலும் பல்வேறு துறைகளிலும் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. ரூ.6,000 கோடியில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 235 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல நெருக்கடிகளை தாண்டி மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

‘சொன்ன சொல்லை காப்பாற்றியுள்ளோம்’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவில் கூறியுள்ளதாவது:

திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறிய 505 வாக்குறுதிகளில், 364 வாக்குறுதிகளை நிறைவேற்றி, 40 வாக்குறுதிகள் பரிசீலனையில் உள்ளதைத் தக்க தரவுகளோடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் கோவி.செழியன் விளக்கி உள்ளனர். இன்னும் ஒருபடி மேலே சொன்னால், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற இந்தியாவுக்கே முன்னோடியாகச் செயல்படுத்தப்படும் முத்திரைத் திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படாதவை. முந்தைய ஆட்சியின் பத்தாண்டுகால நிதி நிர்வாகச் சீர்கேடு, கொரோனா நெருக்கடி, தமிழ்நாட்டை வெல்ல முடியாத ஒன்றிய பாஜ வன்ம அரசின் ஓரவஞ்சனை போன்ற தடைகளைக் கடந்து, சொன்ன சொல்லை காப்பாற்றியுள்ளோம். எளிதில் அணுகும் தன்மை, பதில் கூறும் பண்பு, வெளிப்படைத்தன்மை, அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகம், பொறுப்புணர்வு, நீடித்து நிலைக்கும் தன்மை இதுதான் திமுக.

மாதந்தோறும் மின்கட்டணம்;

தமிழ்நாடு முழுவதும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் முடிந்தவுடன், மாத அடிப்படையில் மின் கட்டணம் முறை அமல்படுத்தப்படும் என போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.