குன்னத்தூர் கிராமத்தில் பேருந்து-வேன் மோதி விபத்து; உயிரிழந்த இருவரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: குன்னத்தூர் கிராமத்தில் அரசு பேருந்தும், தனியார் வேனும் மோதிய விபத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்திருனருக்கு ஆறுதல் தெரிவித்து, தலா ரூ.3லட்சம் நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், குன்னத்தூர் கிராமத்தில் இன்று காலை சுமார் 6 மணியளவில் சென்னையிலிருந்து புதுச்சேரி வழியாக சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து ஒன்றும், கீழார்கொல்லை கிராமத்திலிருந்து ஆலந்தூரிலுள்ள தனியார் நிறுவனத்திற்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் வேன் ஒன்றும் நேருக்குநேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த மூர்த்தி என்பவரின் மனைவி உமா (40) மற்றும் சரவணன் என்பவரின் மனைவி பானு (24) ஆகிய இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு கடும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மேலும் இந்த விபத்தில் காயமடைந்து செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனை, பூஞ்சேரி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், பலத்த காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு ரூ.லட்சமும், லேசான காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

